General09 June 2026

நெடுங்குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு 10 பேர்ச் காணி உரிமை!

இலங்கையின் பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் விசேட கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக பெருந்தோட்ட மற்றுமு் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் இன்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியது. அதன் போதே பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் நிலவும் கடும் போட்டி மற்றும் சவால்களுக்கு மத்தியில், நாட்டின் பொருளாதாரத்துடனும் மக்களின் வாழ்வாதாரத்துடனும் நேரடியாகப் பிணைந்துள்ள இத்தொழில்துறையை மிகவும் அவதானத்துடன் நிர்வகிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்கில், புதிய அரசாங்கத்தினால் வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படைச் சம்பளம் 400 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பில், அரசாங்கம் தனது பங்களிப்பாக நாளாந்தம் 200 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குவதுடன், பெருந்தோட்ட நிறுவனங்கள் எஞ்சிய 200 ரூபாவை வழங்குகின்றன.

இதேவேளை, நெடுங்குடியிருப்பு அறைகளில் வாழும் மக்களுக்கு காணி மற்றும் வீட்டு உரிமைகளை வழங்கும் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு முன்னர் நெடுங்குடியிருப்பில்  வசிப்பவர்களுக்கு  தலா 7 பேர்ச் காணி மட்டுமே வழங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும், தற்போதைய புதிய அரசாங்கத்தின் கீழ் அது 10 பேர்ச் வரை அதிகரிக்கப்பட்டு, காணி உரிமங்கள் வேகமாக வழங்கப்பட்டு வருகின்றன.

இலங்கையின் பெருந்தோட்ட நிலைமைகள் குறித்து சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் வெளியிட்ட சில கருத்துக்கள் துல்லியமானவை அல்ல என பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். இது தொடர்பான உண்மையான மற்றும் விபரமான விளக்கங்களை எதிர்காலத்தில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இத்திட்டங்களை முறையாக முன்னெடுப்பதற்காக தொழில் அமைச்சு மற்றும் பெருந்தோட்ட அமைச்சு ஆகியன இணைந்து விசேட கூட்டு கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாகவும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் மேலும் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes