General09 June 2026

"நாங்கள் செய்வதே சரி என்பதல்ல நல்ல அரசாங்கம்"

ஒரு நல்ல அரசாங்கத்தின் அடையாளம், நாம் செய்வதுதான் சரி என்று பிடிவாதமாக இருப்பதல்ல. சில குறைபாடுகள் இருந்தால் அவற்றை எங்களிடமும் கேட்டறிந்து தீர்வு காண முன்வர வேண்டும்" என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் சபையில் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பெருந்தோட்ட மக்கள் தொடர்பான விவாதத்தின் போது, விடயதானத்திற்குப் பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் சமந்த வித்யாரத்னவின் கவனத்திற்குப் பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து அவர் உரையாற்றினார்.

ஜனாதிபதி கடந்த காலத்தில் ஏற்பட்ட 'டித்வா' புயல் பாதிப்புகள் குறித்து கொத்மலை – வேவன்டன் தோட்டத்தை மையப்படுத்திப் பேசியிருந்தார். இருந்தபோதிலும், இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளை விளக்கி எழுத்து மூலமான கடிதங்கள் பல வழங்கப்பட்டும், இதுவரை அரசாங்கத் தரப்பிலிருந்து எவ்வித பதிலும் கிடைக்கப்பெறவில்லை .

மலையக மக்களின் காணியுரிமை தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசப்பட வேண்டியது கட்டாயமான ஒன்றாகும் எனக் குறிப்பிட்ட அவர், காணியுரிமை வழங்குவதற்கான அமைச்சரவை அனுமதிப் பத்திரங்கள் ஏற்கனவே உள்ளதாகத் தெரிவித்தார். புதிய திட்டங்களை யோசிப்பதை விட, தற்போதிருக்கும் அந்த அமைச்சரவை அனுமதிப் பத்திரங்களை உடனடியாக அமுல்படுத்தினாலே மக்களுக்குப் பெருமளவில் பயனுள்ளதாக அமையும் என அவர் கேட்டுக்கொண்டார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன விடயம் தொடர்பான பிரச்சினைகள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. பெருந்தோட்ட நிறுவனங்களால் தொழிலாளர்களுக்குப் பல்வேறு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இவற்றுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், பெருந்தோட்ட நிறுவனங்களின் நிபந்தனைகளுக்கு அடிபணியாமல், 'வேதன நிர்ணய சபையின்' ஊடாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே தோட்டத் தொழிலாளர்களுக்கு உண்மையான பயன் கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes