General09 June 2026

டெரிகிளேயர் தோட்டத்திலிருந்து பத்தனை சந்திக்கு புதிய பேருந்து சேவை ஆரம்பம்

டெரிகிளேயர் தோட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல தோட்டப் பகுதி மக்கள் பல வருடங்களாக எதிர்நோக்கி வந்த கடுமையான போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வாக, அத்தோட்டத்திலிருந்து பத்தனை சந்தி வரையான புதிய பேருந்து சேவையொன்று நேற்று (08) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த தோட்டப் பகுதியில் வாழும் 3000க்கும் மேற்பட்ட மக்கள், இதுவரை காலமும் தமது அன்றாடப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் நடந்தே செல்ல வேண்டியிருந்தது.

அல்லது அதிக செலவில் முச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர்.

முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் பாடசாலை மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதுடன், அவசர நோயாளர் ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதும் இப்பகுதி மக்களுக்குப் பெரும் சவாலாகக் காணப்பட்டது.

தோட்ட மக்களின் இந்த அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பேருந்து சேவைக்கான அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளும் செயல்பாட்டில் அரசாங்கத்தின் விசேட பங்களிப்பு கிடைத்திருந்ததுடன், இதற்காக நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் மஞ்சுள சுரவீர ஆராச்சி விசேட தலையீட்டையும் ஆதரவையும் வழங்கியிருந்தார்.

இந்தப் புதிய பேருந்து சேவை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி கிருஷ்ணன் கலைச்செல்வி, கொட்டகலை பிரதேச சபையின் உப தலைவர், தலவாக்கலை நகர சபைத் தலைவர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இப்பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் இப்பகுதி மக்கள் தமது அன்றாடப் போக்குவரத்து நடவடிக்கைகளை இலகுவாகவும் குறைந்த செலவிலும் மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes