General09 June 2026

சுரேஷ் சலேயின் மனைவி ஊடகங்களில் தோன்றுவது கோட்டாபயவின் ஆட்சிக் காலத்தை நினைவூட்டுகிறது: முஜிபுர் ரஹ்மான்

தற்போது சுரேஷ் சலேயின் மனைவி அடிக்கடி ஊடகங்களில் தோன்றுவதைக் காண முடிகின்றதென்றும், அதைப் பார்க்கும்போது கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற சம்பவமொன்று நினைவுக்கு வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

"அன்று ஹிஜாஸ் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி, அவரைப் பாரிய சூத்திரதாரியாக்க சுரேஷ் சலே ஏன் முயற்சித்தார் என்பது குறித்துக் கண்டறியப்பட வேண்டும்" என அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், "அவர் குற்றமற்றவர் என்றால் பயப்படத் தேவையில்லை, சட்டத்தின் முன் தனது குற்றமற்ற தன்மையை நிரூபிக்க வேண்டுமே தவிர, உயிரை மாய்த்துக் கொள்வதல்ல" என்றும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலொரு நாள் இரவு 9.00 மணியளவில், ஹிஜாஸின் மனைவியிடமிருந்து தமக்கு அவசர தொலைபேசி அழைப்பொன்று வந்ததாகவும், குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தமது வீட்டிற்கு வந்திருப்பதாக அவர் தெரிவித்ததாகவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின்னர் தாம் அந்த வீட்டிற்குச் சென்றதாகவும், குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் வினவியபோது வாக்குமூலமொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறி ஹிஜாஸைக் கைது செய்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

அவ்வாறு ஹிஜாஸ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதன் பின்னர், அவர் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் முஜிபுர் ரஹ்மான் தனது முகநூல் பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes