General09 June 2026

சங்கீத்சனின் கைது அரச பயங்கரவாதம்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடும் கண்டனம் !

தமிழ்த் தேசிய எழுச்சிப் பாடல்களைப் பாடி இளைஞர்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் பாடகர் சங்கீத்சன், இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளமைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தமிழக அமைச்சர் வன்னி அரசு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

"தமிழீழத்தின் நம்பிக்கைக்குரிய ராப் பாடகரான சங்கீத்சன், தனது பாடல்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை ஒன்றிணைத்து வருகிறார்.

முள்ளிவாய்க்கால் மண்ணின் தியாகத்தில் இருந்து உதித்த உணர்வலைகளின் அடையாளமாக விளங்கும் இவரை, சிங்கள பேரினவாத அரசு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இது கடும் கண்டனத்திற்குரிய அரச பயங்கரவாதச் செயலாகும்.

இடதுசாரி அரசியலை முன்னெடுப்பதாக உலக அரங்கில் கூறிவரும் அநுர குமார திஸாநாயக தலைமையிலான அரசாங்கம், உண்மையில் இனப்படுகொலை செய்த ராஜபக்ஷவின் பாணியையே பின்பற்றி வருகிறது என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

தமிழீழ இளைஞர்களின் விடுதலைக் குரலை ஒடுக்குவதற்காகப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ஒரு கருவியாக இலங்கை அரசு பயன்படுத்துவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.

பேரினவாதத்தின் ஒடுக்குமுறை இன்னும் மாறவில்லை என்பதற்கு பாடகர் சங்கீத்சனின் கைது ஒரு சாட்சியமாகும்.

எனவே, தமிழீழ உணர்வோடு எழுச்சிப் பாடல்களைப் பாடி வரும் தம்பி சங்கீத்சனை யாழ் சிறையிலிருந்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்" என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes