General26 September 2026

திலீபனின் 39 ஆவது நினைவு தினத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் வடகிழக்கில் இடம்பெற்றன!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உணவு தவிர்ப்புப் போராட்டத்தின் போது உயிர்நீத்த திலீபனின் 39 ஆவது நினைவு தினத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இடம்பெற்றன.

1987 ஆம் ஆண்டு ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தார்.

அவரது நினைவேந்தல் நிகழ்வுகள் ஆண்டுதோறும் செப்டம்பர் 15 முதல் 26 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படுகின்றது.

அதற்கமைய, யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில், அவர் உயிரிழந்த நேரமான காலை 10.48 அளவில் இன்று அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இதன்போது நினைவிடத்தில் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டதுடன், திலீபனின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் கிளிநொச்சியிலும் இருந்து திலீபனின் உருவப்படங்களைத் தாங்கிய ஊர்திகள் நினைவிடத்தை வந்தடைந்தன.

இதனிடையே, மட்டக்களப்பிலும் திலீபனின் 39 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

அதற்கமைய, காந்தி பூங்காவில் இரு வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

அதேபோன்று, மன்னாரிலும் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, திலீபனின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை, திருகோணமலை வெருகல் பிரதேச சபை மண்டபத்திலும் திலீபனின் 39 ஆவது நினைவேந்தல் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதன்போது, பிரதான சுடர் ஏற்றப்பட்டு, திலீபனின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன், விளக்கேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.
Related recommendation
Hiru TV News | Programmes