General04 October 2026

எதிரே வந்த பேருந்தின் கண்ணாடி மீது மோதிய பொலித்தீன் பை: காவல் நிலையம் வரை சென்ற விவகாரம்!

ஹட்டனிலிருந்து பொகவந்தலாவ நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்திலிருந்து வீசப்பட்ட பொலித்தீன் பை ஒன்று, எதிரே வந்த மற்றுமொரு பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியில் மோதிய சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போ அதிகாரி பாலித வீரசூரிய கருத்து தெரிவிக்கையில், தம்பதியினர் ஒருவரும் அவர்களின் குழந்தையும் பேருந்தில் பயணித்த போது, குழந்தைக்குப் பேருந்தினுள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளது.

குழந்தையின் தந்தை அதனை ஒரு பொலித்தீன் பையில் சேகரித்து, நோர்வுட் பகுதியைக் கடந்து செல்லும்போது பேருந்தின் ஜன்னல் வழியாக வெளியே வீசியுள்ளார்.

குறித்த பை எதிரே வந்த மற்றொரு இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியில் மோதியுள்ளது.

இதனையடுத்து, இரு பேருந்துகளின் சாரதிகளும் சம்பந்தப்பட்ட பயணியுடன் நோர்வுட் காவல்துறை நிலையத்திற்குச் செல்லத் தயாராகியுள்ளனர்.

எனினும், தனது செயலால் ஏற்பட்ட அசௌகரியத்தை உணர்ந்த பயணி, தனது தவறை ஏற்றுக்கொண்டு, டிப்போவிற்குச் சென்று உரிய தொகையைச் செலுத்திப் பிரச்சினையைச் சுமூகமாகத் தீர்த்துக்கொண்டதாக டிப்போ அதிகாரி தெரிவித்தார்.

பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகள் ஓடும் பேருந்துகளிலிருந்து எந்த விதப் பொருட்களையும் வெளியே வீசவேண்டாம் என்றும், இவ்வாறான செயல்கள் பிற வாகன சாரதிகளுக்கும் பயணிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்றும் டிப்போ நிர்வாகம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes