General05 October 2026

நாட்டில் இளைஞர்களுக்கான வேலையின்மை 17.8 சதவீதமாக உயர்வு

இலங்கையின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 50 சதவீதமாக உயர்ந்துள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

2021ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதிவான அதிகபட்ச தொழிலாளர் பங்கேற்பு விகிதமாக இது அமைந்துள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, நாட்டின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் மாற்றமின்றி 4 சதவீதமாக நிலைத்துள்ளது.

எவ்வாறாயினும், ஒட்டுமொத்த புள்ளிவிபரங்களுக்குப் பின்னால் தொழிலாளர் சந்தையில் சில முக்கியமான ஏற்றத்தாழ்வுகள் காணப்படுவதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

க.பொ.த. உயர்தரப் பரீட்சை அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகைமைகளைக் கொண்ட பெண்களின் வேலையின்மை விகிதம் 9.6 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

இது தேசிய வேலையின்மை விகிதத்தை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாகும். அத்துடன், அதே கல்வித் தகைமைகளைக் கொண்ட ஆண்களின் வேலையின்மை விகிதத்தை விடவும் சுமார் மூன்று மடங்கு அதிகமாகும்.

இதனிடையே, இந்தக் காலாண்டில் இளைஞர் வேலையின்மை விகிதமும் அதிகரித்துள்ளது. முந்தைய காலாண்டில் 16.1 சதவீதமாக இருந்த இளைஞர் வேலையின்மை விகிதம், தற்போது 17.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அத்துடன், வேலைவாய்ப்பில் உள்ளவர்கள் பணியாற்றும் நேரமும் குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

வாரத்திற்கு 40 மணித்தியாலங்கள் அல்லது அதற்கு மேல் பணியாற்றியவர்களின் விகிதம், முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைந்துள்ளது.

அதேவேளை, வேலைவாய்ப்பில் இருந்தபோதிலும் அந்தக் காலாண்டில் எந்தவொரு மணித்தியாலமும் பணியாற்றாதவர்களின் விகிதமும் அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

மேலும், இலங்கையின் தொழிலாளர் சந்தையில் விவசாயத் துறையிலிருந்து படிப்படியாக விலகும் நீண்டகாலப் போக்கும் இந்தத் தரவுகள் மூலம் வெளிப்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டின் மொத்த வேலைவாய்ப்புகளில் சுமார் 27 சதவீதம் விவசாயத் துறையைச் சேர்ந்ததாக இருந்த நிலையில், தொழிலாளர்கள் கைத்தொழில் மற்றும் சேவைத் துறைகளை நோக்கி நகர்ந்து வருவதன் காரணமாக, அந்தப் பங்கு தற்போது 25 சதவீதத்துக்கும் குறைவாகக் குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes