General05 October 2026

IMF ஏழாவது மீளாய்வுக்கான அதிகாரிகள் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டது

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழான ஏழாவது மீளாய்வை நிறைவு செய்வதற்காக, IMF அதிகாரிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் அதிகாரிகள் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதனை IMF நிறைவேற்றுச் சபை அங்கீகரித்த பின்னர், இலங்கைக்கு சுமார் 345 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதி கிடைக்கவுள்ளது.

இதன் மூலம் EFF திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைக்கும் மொத்த IMF நிதி வசதி சுமார் 2.7 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கும்.

எவ்வாறாயினும், 2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தல், பல்தரப்பு நாடுகளிடமிருந்து நிதிப் பங்களிப்புகளை உறுதிப்படுத்துதல் மற்றும் கடன் மறுசீரமைப்பில் போதுமான முன்னேற்றத்தை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளதாக IMF தெரிவித்துள்ளது.

வெளிப்புற பொருளாதார அதிர்ச்சிகளுக்கு மத்தியிலும் இலங்கை பொருளாதாரம் குறிப்பிடத்தக்க நெகிழ்வுத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளதாக IMF குறிப்பிட்டுள்ளது.

2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 4.2 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளதாகவும், தொடர்ந்து பொருளாதார வளர்ச்சி பதிவாகியுள்ள 11ஆவது காலாண்டாக இது அமைந்துள்ளதாகவும் IMF தெரிவித்துள்ளது.

இதேவேளை, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட பல்தரப்பு நிறுவனங்களின் நிதியுதவிகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், IMF நிறைவேற்றுச் சபையின் அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes