மத்திய கிழக்கில் நிலவும் பிராந்திய பதற்ற தணிப்பு மற்றும் ஈரான் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் சிறப்புத் தூதர்களான ஸ்டீவ் விட்கோஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரை கட்டார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி டோஹாவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதேவேளை, ஈரானியப் பேச்சுவார்த்தைக் குழுவினரும் தற்போது டோஹாவில் முகாமிட்டுள்ள போதிலும், இரண்டு தரப்புக்கும் இடையே எவ்வித நேரடி பேச்சுவார்த்தைகளும் திட்டமிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்னதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்புகள் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் வலியுறுத்தியுள்ளார்.
லெபனானில் தொடரும் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல்கள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும், வோஷிங்டனால் விதிக்கப்பட்டுள்ள ஈரானிய எண்ணெய் மீதான தடைகள் நீக்கப்பட வேண்டும் மற்றும் முடக்கப்பட்டுள்ள ஈரானிய நிதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே ஈரானின் முதன்மை நிபந்தனைகளாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








