தென்மேற்கு பிரான்ஸின் போர்டோ நகரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் காட்டுத்தீ பரவி வருவதால், பொதுமக்கள் வெளியேற்றப்பட்டால் அவர்களுக்கு தங்குமிடம் வழங்க ஆயத்தமாகி வருவதாக நகர முதல்வர் தோமஸ் காஸநேவ் தெரிவித்துள்ளார்.
சிரோண்ட் பிராந்தியத்தில் உள்ள செஸ்டாஸ் நகரில் மட்டும் 42,000 ஹெக்டேயர் நிலப்பரப்பு எரிந்து சாம்பலாகியுள்ளது.
அத்துடன் 240 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
இந்த நிலையில், தற்போதைய நிலைமையை "நூற்றாண்டின் பேரழிவு" என நகர முதல்வர் வர்ணித்துள்ளார்.
காட்டுத்தீ காரணமாக, பிரான்ஸில் இதுவரை சுமார் 220,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர்.
ஜனவரி மாதம் முதல் 116,085 ஹெக்டேயர் நிலப்பரப்பு எரிந்துள்ளதாகவும், பதிவு செய்யப்பட்ட 13,566 காட்டுத்தீ சம்பவங்களில் 90 வீதம், அலட்சிய போக்கினாலும், மனித நடவடிக்கைகளினாலும் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் செபஸ்டியன் லெகோர்னு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, திட்டமிட்டு தீ வைக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக ஜூலை 6 ஆம் திகதி முதல் 162 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் நேரில் சென்று கள நிலவரங்களைப் பார்வையிட்டுள்ளார்.
இதற்கிடையில் தீ ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டிற்கு மேற்கே தீவிரமடைந்துள்ளதால், அந்த நாடு ஐந்தாவது நாளாக தேசிய அவசர நிலையை எதிர்கொண்டுள்ளது.
ஸ்பெயினில் இதுவரை 100,000-க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அல்மோரோக்ஸ்,வில்லா டெல் பிராடோ போன்ற பகுதிகளில் ஏற்பட்ட தீ, சுமார் 27,000 ஹெக்டேயருக்கும் அதிகமான நிலப்பரப்பை அழித்துள்ளது.
இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை எதிர்பார்க்கப்படும் கடுமையான வெப்ப அலை, தீயணைப்புப் பணிகளை மேலும் சிக்கலாக்கும் என அஞ்சப்படுகிறது.
காலநிலை மாற்றமே ஐரோப்பாவில் இத்தகைய தீவிரமான வெப்ப அலைகளுக்கும் காட்டுத்தீப்பரவலுக்கும் முக்கியக் காரணம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.









