அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை: யாழ்ப்பாணத்தில் மூன்று வர்த்தக நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்

Monday, 24 August 2026 - 1:42

%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%3A+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
நிர்ணயிக்கப்பட்ட மற்றும் அச்சிடப்பட்ட விலையை விட அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று வர்த்தக நிலையங்களுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் மொத்தம் 668,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகளைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

120 ரூபாய் அதிகபட்ச சில்லறை விலை கொண்ட ஒரு லீட்டர் குடிநீர் போத்தலை 200 ரூபாய்க்கு விற்பனை செய்த யாழ்ப்பாணத்திலுள்ள உணவகம் மற்றும் மதுபான விற்பனையகம் ஒன்றுக்கு 300,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

அச்சிடப்பட்ட சில்லறை விலையை விட அதிக விலைக்கு சோடா போத்தலை விற்பனை செய்த மற்றொரு உணவகத்திற்கு 100,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஒரு கிலோகிராம் பொன்னி சம்பா அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையான 255 ரூபாயை விட அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு 268,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்தநிலையில், பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கு முன்னர் அச்சிடப்பட்ட விலை மற்றும் அதிகபட்ச சில்லறை விலையைச் சரிபார்க்குமாறு நுகர்வோர் கோரப்பட்டுள்ளனர்.

முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் போது ஆதாரமாகப் பயன்படுத்துவதற்குப் பற்றுச்சீட்டுகளைப் பெற்றுப் பாதுகாக்குமாறும் நுகர்வோர் விவகார அதிகாரசபை, நுகர்வோரைக் கேட்டுக்கொண்டுள்ளது.

வர்த்தக அத்துமீறல்கள் தொடர்பில் 1977 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்தின் ஊடாக வேலை நேரங்களில் அறிவிக்க முடியும் என்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.