சமூக வலைத்தளங்களில் இளம் வயதினரைப் பாதிக்கும் வகையில் தவறான கருத்துகள் மற்றும் பதிவுகளை வெளியிட்டதாகக் கூறப்படும் திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்ட 12 பேர் மீது சேலம் மாநகர சைபர் குற்றவியல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சேலம் பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சிலர் 18 வயதுக்குட்பட்டவர்களைப் பாதிக்கக்கூடிய வகையில் தவறான கருத்துகள் மற்றும் உள்ளடக்கங்களை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்ட 12 பெண்கள் சமூக வலைத்தளங்களில் நேரலை மற்றும் பதிவுகள் மூலம் தவறான எண்ணங்களைத் தூண்டும் வகையில் பேசுவதாகவும், இதுபோன்ற உள்ளடக்கங்கள் இளைஞர்களைப் பாதிக்கும் வாய்ப்புள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற உள்ளடக்கங்களை வெளியிடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டத்தரணி அஜித் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையடுத்து, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், சமூக வலைத்தளங்களில் தவறான உள்ளடக்கங்களை வெளியிட்டதாகக் கூறப்படும் திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வழக்குத் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் காவல்துறையினர், சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.









