மும்பை இந்தியன்ஸ் அணியின் பின்னடைவுக்கு தலைவர் ஹர்திக் பாண்டியாவை மட்டுமே குறை கூற முடியாது என்றும், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற மூத்த வீரர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் வீரர் இயன் பிஷப் தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 8 போட்டிகளில் 6 தோல்விகளைச் சந்தித்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் 243 ஓட்டங்களை குவித்தும் அணியால் அதைப் பாதுகாக்க முடியவில்லை. இதனால் பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு மிகவும் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்நிலையில், அணியின் இந்த நிலைமை குறித்து இயன் பிஷப் கருத்து தெரிவித்துள்ளார்.
தோல்விக்கு ஒரே நபரை மட்டும் காரணமாகக் கூற முடியாது. ஹர்திக் பாண்டியாவும் தனது ஆட்டம் சிறப்பாக இல்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். தந்திரோபாய ரீதியாக அவர் இன்னும் சில மாற்றங்களைச் செய்யலாம். எனினும், பெரிய வீரர்கள் தங்களது பங்களிப்பைச் சரியாக வழங்க வேண்டும்.
களத்தில் அணித் தலைவர் என்னதான் திட்டங்களை வகுத்தாலும், வீரர்கள் சிறப்பாகச் செயல்படவில்லை என்றால் அது கடினமாகிவிடும். அணியின் அனைவரும் இதில் தொடர்புடையவர்கள். எனவே, முழுப் பழியையும் ஒருவரிடமே சுமத்த முடியாது. என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சூர்யகுமார் யாதவ் 8 போட்டிகளில் 20 சராசரியுடன் 162 ஓட்டங்களை மட்டுமே எடுத்துள்ளார். அதேபோல், முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா 8 போட்டிகளில் 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். இது அணியைப் பெரிதும் பாதித்துள்ளது.
அத்துடன், டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் விளையாடிவிட்டு வந்த இவர்கள், போதிய ஓய்வின்றி உடனடியாக ஐபிஎல் தொடரில் களமிறங்கியது சோர்வை ஏற்படுத்தியிருக்கலாம். பும்ரா மற்றும் சூர்யகுமார் ஆகியோருக்குச் சிறிது ஓய்வு கிடைத்திருக்க வேண்டும் என பிஷப் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை மும்பை இந்தியன்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற, மீதமுள்ள 6 போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையும் பார்க்க..









