திறைசேரியில் இருந்து காணாமல் போன 2.5 மில்லியன்பணம் நாட்டு மக்களின் வரிப்பணம். எனவே, அந்தப் பணத்திற்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமை மக்களுக்கு உண்டு என கொழும்பு திறந்த பல்கலைக்கழக வருகை தரு விரிவுரையாளர் சாம்பசிவம் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 8 மணிக்கு சூரியன் வானொலியில் ஒலிபரப்பாகிய விழுதுகள் நிகழ்ச்சியிலே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக மக்கள் வழங்கிய பாரிய ஆணையுடனேயே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
ஜப்பான் அல்லது மேற்குலக நாடுகளைப் போல, ஒரு தவறு நடந்தால் ஆட்சியாளர்கள் பதவி விலகிப் பொறுப்பேற்கும் கலாசாரம் இலங்கையில் இன்னும் வேரூன்றவில்லை.
தவறு நடக்கும்போது அரசியல்வாதிகள் அதிகாரிகள் மீதோ அல்லது அதிகாரிகள் அரசியல்வாதிகள் மீதோ விரல் நீட்டித் தப்பித்துக் கொள்ள முடியாது.
அரசாங்கங்கள் மாறினாலும் அரச அதிகாரிகள் நிரந்தரமானவர்கள். எனவே, அவர்கள் நிதி மோசடிகளில் ஈடுபடுவது அல்லது அவற்றுக்கு உடந்தையாக இருப்பது பாரிய சிக்கல்.
நிதி அமைச்சு அல்லது திறைசேரி அதிகாரிகளின் தவறுக்கு ஒட்டுமொத்த நிறைவேற்றுத்துறையும் (Executive) பொறுப்புக்கூற வேண்டும்.
திறைசேரியில் இருக்கும் பணம் நாட்டு மக்களின் வரிப்பணம். எனவே, அந்தப் பணத்திற்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமை மக்களுக்கு உண்டு.
ஜனநாயகத்தின் மிக முக்கியப் பண்பான வெளிப்படைத்தன்மையைப் பேண வேண்டியது அரசாங்கத்தின் தார்மீகக் கடமையாகும் என கொழும்பு திறந்த பல்கலைக்கழக வருகை தரு விரிவுரையாளர் சாம்பசிவம் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.








