பிளே ஆஃப் போராட்டம் உச்சத்தில் - யாருக்கு எத்தனை வெற்றிகள் தேவை?

Saturday, 02 May 2026 - 9:27

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87+%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+-+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%3F
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், டெல்லி கேபிட்டல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் 225 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், டெல்லி அணி 19.1 ஓவர்களில் அந்த இலக்கை அடைந்தது.

ஐபிஎல் வரலாற்றில் டெல்லி அணி வெற்றிகரமாக துரத்திய மிகப் பெரிய ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.

அதன்படி, இந்த ஐபிஎல் தொடரில் முதல் முறையாக டெல்லி அணிக்காக விளையாடிய மிட்செல் ஸ்டார்க், 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

அவர் முதல் ஓவரிலேயே யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை வீழ்த்தி அணிக்கு நல்ல தொடக்கத்தை வழங்கினார்.

டெல்லி அணிக்காக பெத்தும் நிஷங்க மற்றும் கே.எல். ராகுல் ஆகிய இருவரும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி அரைசதங்களைக் குவித்து நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேபிட்டல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அதன்படி, இதுவரை நடைபெற்ற 18 ஐபிஎல் தொடர்களில், 10 அணிகள் பங்கேற்ற 5 தொடர்களை (2011, 2022, 2023, 2024, 2025) அவதானிக்கும்போது, ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாடியுள்ளன.

இந்தத் தொடர்களில் குறைந்தபட்சம் 16 புள்ளிகளைப் பெற்ற அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

2024ஆம் ஆண்டு தொடரில் 14 புள்ளிகளைப் பெற்ற பெங்களூரு அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது, 10 அணிகள் பங்கேற்ற தொடர்களில் இதற்கு நேரிட்ட ஒரேயொரு விதிவிலக்காகும்.

எனவே, இந்தத் தொடரிலும் பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய 16 புள்ளிகள் என்ற இலக்கு அணிகளுக்கு முக்கியமானதாகும்.

அந்த இலக்கை அடைவதற்கு ஒவ்வொரு அணிக்கும் எஞ்சிய போட்டிகளில் தேவைப்படும் புள்ளிகள் மற்றும் வெற்றிகள் பின்வருமாறு அமைகின்றன.

பஞ்சாப் கிங்ஸ் அணி இப்போட்டிகளில் பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்த எஞ்சிய 6 போட்டிகளில் 3 புள்ளிகள் அல்லது 2 வெற்றிகள் தேவைப்படுகின்றன.

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கும் எஞ்சிய 5 போட்டிகளில் தலா 4 புள்ளிகள் அல்லது 2 வெற்றிகள் தேவைப்படுகின்றன.

ராஜஸ்தான் ரோயல்ஸ்அணிக்கு 16 புள்ளிகள் என்ற இலக்கை அடைய எஞ்சிய 4 போட்டிகளில் 4 புள்ளிகள் அல்லது 2 வெற்றிகள் தேவை.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எஞ்சிய 5 போட்டிகளில் 6 புள்ளிகள் அல்லது 3 வெற்றிகள் தேவைப்படுகின்றன.

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எஞ்சிய 5 போட்டிகளில் 8 புள்ளிகள் அல்லது 4 வெற்றிகள் தேவைப்படுகின்றன.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எஞ்சிய 6 போட்டிகளில் 10 புள்ளிகள் அல்லது 5 வெற்றிகள் தேவை.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 16 புள்ளிகளைப் பெற எஞ்சிய 6 போட்டிகளில் 11 புள்ளிகள் அல்லது 6 வெற்றிகள் தேவைப்படுகின்றன.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் ஆகிய அணிகளுக்கும் பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய எஞ்சிய 6 போட்டிகளிலும் 6 வெற்றிகள் மட்டுமே ஒரே தீர்வாக உள்ளது.

இந்தத் தரவுகளின்படி, அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுவதோடு, டெல்லி கேபிட்டல்ஸின் வெற்றியானது ஏனைய அணிகளுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.