ஜப்பானின் ஒகினாவாவைத் தாக்கியது 'டொல்பின்': துறைமுகங்களை மூடியது சீனா: போக்குவரத்தும் முடக்கம்!

Saturday, 08 August 2026 - 12:35

%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%27%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%27%3A+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%3A+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%21
'டொல்பின்' புயல் காரணமாக ஜப்பானின் ஒகினாவா பகுதியில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், சீனா மற்றும் தாய்வானிலும் போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

ஜப்பானின் தெற்குப் பகுதியான ஒகினாவாவைத் தாக்கியுள்ள இந்த புயல் காரணமாக, சுமார் 14,000 கட்டடங்களுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதுடன், ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன் அந்த பகுதிக்கான ஏ.என்.ஏ (ANA) மற்றும் ஜப்பான் எயார்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களின் உள்நாட்டு வானூர்தி சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த புயலால் மணிக்கு 216 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசி வரும் நிலையில், நாளை இரவு அல்லது திங்கட்கிழமை அதிகாலை வேளையில் இது சீனாவின் கிழக்கு மற்றும் தெற்கு கடலோரப் பகுதிகளைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சீனா தனது கடலோரப் பகுதிகளில் மிக உயர்ந்தபட்ச புயல் எச்சரிக்கையை விடுத்துள்ளது. அத்துடன் துறைமுகச் செயல்பாடுகளை இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ள சீனா, 162 பயணியர் படகுச் சேவைகளையும் ரத்து செய்துள்ளது.

அத்துடன் ஷாங்காய் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாகாணங்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடருந்து சேவைகளும், வானூர்தி சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்த புயல் அச்சுறுத்தல் காரணமாக தாய்வானில் 63 சர்வதேச வானூர்தி சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், தாய்வான் நீரிணை வழியே பயணிக்கும் கப்பல்கள் தமது போக்குவரத்து கட்டுப்பாட்டு உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும் என சீனா அறிவுறுத்தியுள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என தாய்வான் எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.