அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவலை தொடர்ந்து, 6 சிறுவர்கள் உட்பட 8 பேர் உடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
கிராண்ட் ஹேவன் நகரில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவலையடுத்து, தகவலறிந்து சென்ற தீயணைப்பு பிரிவினர் மற்றும் காவல் துறையினர், வீட்டிற்குள் இருந்து 8 பேரின் உடலங்களை மீட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 5 முதல் 15 வயதுக்குட்பட்ட 6 சிறுவர்களும் அடங்குகின்றனர். பலியானவர்களில் சிலரது உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வீட்டில் வசித்து வந்த அனைவரும் உயிரிழந்துள்ளதாகக் கருதப்படும் நிலையில், வெளிப்புறச் சந்தேகநபர்கள் எவரையும் காவல்துறை தேடவில்லை.
வீட்டிலுள்ள எவரேனும் ஒருவர் அனைவரையும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காக்கியதன் பின்னர், உயிர் மாய்ப்பு செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இந்தத் தீ விபத்து சந்தேகத்திற்குரிய வகையில் உள்ளதாகவும், திட்டமிட்டுத் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுவதால் மிச்சிகன் மாநிலக் காவல்துறையின் தீ வைப்பு விசாரணைப் பிரிவினர் களத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.








