இஸ்ரேலின் போரினால், காஸாவில், கடந்த 3 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கால்பந்து மற்றும் ஏனைய விளையாட்டு நடவடிக்கைகளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக பாலஸ்தீன கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ராமல்லாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, செப்டம்பர் 4 ஆம் திகதி முதல் லீக் போட்டிகள் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கும் என்று கூட்டமைப்பின் தலைவர் ஜிப்ரீல் ரஜூப் (Jibril Rajoub) தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் போரில் உயிரிழந்த 1,014 பாலஸ்தீன விளையாட்டு வீரர்களின் நினைவாக, மீண்டும் ஆரம்பிக்கப்படும் முதல் போட்டித் தொடருக்கு ஆயிரம் தியாகிகளின் கிண்ணம் (Thousand Martyrs Cup) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப்போட்டித் தொடரில் 200 க்கும் மேற்பட்ட கழக அணிகள் போட்டியிடவுள்ளன.
இதில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இருந்து 146 அணிகளும், காஸாவிலிருந்து 44அணிகளும், லெபனானில் உள்ள பாலஸ்தீன ஏதிலிகள் முகாமில் இருந்து 36 அணிகளும் பங்கேற்கவுள்ளன.
இதற்கிடையில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை குடியிருப்புகளில் இயங்கும் இஸ்ரேலிய கழக அணிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், இஸ்ரேலின் ஃபிஃபா உறுப்பினர் உரிமையை இடைநிறுத்த வேண்டும் என்றும் பாலஸ்தீன கூட்டமைப்பு ஃபிஃபா தலைமையிடம் கோரியுள்ளது.









