மெக்சிகோவில் தாயாக வேண்டும் என்ற தீவிர ஆசையின் பின்னணியில், போலியான கர்ப்பத்தை உருவாக்கி, பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தையை மருத்துவமனையிலிருந்து எடுத்துச் சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட இளம் பெண்ணின் வழக்கை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘A Child of My Own’ என்ற புதிய ஆவணப்படம் கவனம் பெற்றுள்ளது.
2009ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் திகதி, 26 வயதான எலியோனோர் எலெஹான்ட்ரா மரின் மெண்டோசா என்ற பெண் மெக்சிகோ நகரிலுள்ள மருத்துவமனையொன்றிலிருந்து பிறந்த குழந்தையுடன் வெளியேறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழந்தை மெண்டோசாவின் குழந்தை அல்ல எனவும், சம்பவம் இடம்பெற்ற சில மணி நேரங்களுக்குப் பின்னர் அவர் தனது கணவர் ஆர்துரோவுடன் விடுதி ஒன்றில் கைது செய்யப்பட்டதாகவும் ஆவணப்படத்தில் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் குழந்தை பாதுகாப்பாக அதன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கில் குழந்தையைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மெண்டோசாவுக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரது வழக்கு அப்போது மெக்சிகோவில் பெரும் ஊடகக் கவனத்தைப் பெற்றிருந்தது.
மெண்டோசா தனது கணவர், குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களிடம் தான் கர்ப்பமாக இருப்பதாக நம்ப வைத்ததாகவும், தனது கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் வகையில் மருத்துவப் பதிவுகளில் மாற்றங்களைச் செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
எனினும், குழந்தையின் தாயான மய்ரா நவரோ வேகா, மெண்டோசாவின் விளக்கத்தை மறுத்ததுடன், குழந்தையை அவரிடம் வழங்குவது தொடர்பில் தாம் எந்தவித உடன்பாடும் செய்துகொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளதாக ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தின் ஊடாக தாய்மை குறித்த சமூக அழுத்தம், குடும்ப எதிர்பார்ப்புகள் மற்றும் பெண்களின் மனநலம் தொடர்பான பல்வேறு கேள்விகளையும் ‘A Child of My Own’ ஆவணப்படம் ஆராய்கிறது.
சிறைவாசத்திற்குப் பின்னர், தாயாக வேண்டும் என்ற தனது விருப்பம் பெருமளவில் மற்றவர்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து உருவானது என்பதை உணர்ந்ததாக மெண்டோசா தெரிவித்துள்ளதாகவும் ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘A Child of My Own’ ஆவணப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 13ஆம் திகதி Netflix தளத்தில் வெளியாகவுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.









