General22 September 2025

நோயாளர் மரணித்ததையடுத்து மருத்துவரையும் ஊழியர்களையும் சிறைப்பிடித்த குடும்பத்தினர் - களுத்துறையில் சம்பவம்

வைத்தியசாலையில் உயிரிழந்த நோயாளர் ஒருவரின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட ஐந்து பேர், மருத்துவரொருவரையும் சுகாதார ஊழியர்களையும் கொலை செய்வதாக அச்சுறுத்தி, சுமார் ஒரு மணி நேரம் நோயாளர் விடுதியில் அவர்களை பூட்டி வைத்திருந்த சம்பவமொன்று களுத்துறை - நாகொட மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது.

களுத்துறை, நாகொட போதனா மருத்துவமனையின் 16வது நோயாளர் விடுதியில் மருத்துவரொருவரும் நான்கு மருத்துவ ஊழியர்களும் இத்தகைய துன்புறுத்தலுக்கு ஆளானதாக மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

களுத்துறை வடக்கு பகுதியில் வசித்துவந்த புற்றுநோயாளர் ஒருவர் கடந்த 18 ஆம் திகதி இரவு குறி்த்த வைத்தியசாலை சிகிச்சை பெற சென்றிருந்த நிலையில் உயிரிழந்தார்.

இதனையடுத்து, அவரது குடும்ப உறுப்பினர்கள் உட்பட ஐந்து பேர் அதிகாலை 2 மணியளவில் மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அதன்போது, அங்கிருந்த ஆண் மருத்துவர் ஒருவரையும், பெண் தாதியர் ஒருவரையும், உதவியாளர் ஒருவரையும் சுமார் ஒரு மணி நேரம் நோயாளர் விடுதியில் தடுத்து வைத்து, குறித்த குழுவினர் அச்சுறுத்தியதாகவும், அங்கிருந்து வெளியேறவோ அல்லது தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளவோ ​அங்கிருந்தவர்களை அனுமதிக்கவில்லை என்றும் குறித்த பேச்சாளர் தெரிவித்தார்.

இதனால் நோயாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

குறித்த புற்றுநோயாளர் உயிரிழப்பதற்கு முன்னதாக அவரை கொழும்புக்கு மாற்றுவது தொடர்பாகவும், அதற்காக நோயாளர் காவு வண்டியை கோருவது தொடர்பாகவும் இரு தரப்பினருக்கும் இடையே முன்னதாக வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அது வாக்குவாதமாக மாறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மருத்துவர், அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக களுத்துறை தெற்கு தலைமையக காவல்துறை தெரிவித்துள்ளது.
Related Recomands
Hiru TV News | Programmes