கோடீஸ்வரர்களின் ஆட்சி: உலகளாவிய ஏழ்மைக்கு மத்தியில் உச்சம் தொட்ட பெரும் செல்வந்தர்களின் சொத்து மதிப்பு
உலகில் ஒருபுறம் பசியும் வறுமையும் அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளதாக ஒக்ஸ்போம் சர்வதேச அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 2025 ஆம் ஆண்டில் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 16 வீதம் உயர்ந்து, 18.3 டிரில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளின் சராசரி வளர்ச்சியை விட மூன்று மடங்கு அதிகமாகும். 2020 ஆம் ஆண்டிலிருந்து கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 81 வீதம் உயர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த ஒரே ஆண்டில் மட்டும் இவர்களின் சொத்து மதிப்பு 2.5 டிரில்லியன் டொலர் அதிகரித்துள்ளது. இந்தத் தொகையைக் கொண்டு உலகில் நிலவும் கடும் வறுமையை 26 முறை ஒழிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை முதல் முறையாக 3,000 ஐத் தாண்டியுள்ளது. ஈலோன் மஸ்க் உலகின் முதல் அரை டிரில்லியன் டொலர் சொத்து கொண்ட நபராக உருவெடுத்துள்ளார். சாதாரண மக்களை விட கோடீஸ்வரர்கள் அரசியல் பதவிகளைப் பெறுவதற்கான வாய்ப்பு 4,000 மடங்கு அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய ஊடக நிறுவனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை மற்றும் முன்னணி சமூக வலைதளங்கள் அனைத்தும் கோடீஸ்வரர்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. ஈலோன் மஸ்க், ஜெஃப் பெசோஸ் போன்றோரை உதாரணமாகக் காட்டியுள்ள ஒக்ஸ்போம், இவர்கள் ஊடகங்கள் மூலம் பொதுக்கருத்தை தங்களுக்குச் சாதகமாக மாற்றுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. ஊடகத்துறையில் உயர் பதவிகளில் இருப்பவர்களில் 27 வீதமானோரே பெண்கள் எனவும் சிறுபான்மையினர் அல்லது இன ரீதியாகப் பாதிக்கப்பட்ட பிரிவினர் 23 வீதம் மட்டுமே இருப்பதால் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்கள் நசுக்கப்படுவதாக அறிக்கை கூறுகிறது. ஒக்ஸ்போம் சர்வதேச நிறைவேற்று பணிப்பாளர் அமிதாப் பெஹார் கூறுகையில், பொருளாதார ரீதியாக ஏழையாக இருப்பது பசியை உருவாக்குகிறது, ஆனால் அரசியல் ரீதியாக ஏழையாக இருப்பது கோபத்தை உருவாக்குகிறது என எச்சரித்துள்ளார். இறுதியில் ஒக்ஸ்போம் பின்வரும் பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது. செல்வந்தர்களுக்கு வரி: அதிகப்படியான சொத்து வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் வரி விதிப்பதன் மூலம் சமத்துவமின்மையைக் குறைத்தல். அரசியல் பாதுகாப்பு: அரசியலில் பெரும் பணக்காரர்களின் தலையீட்டைக் குறைக்க கடுமையான சட்டங்களைக் கொண்டு வருதல். ஊடக சுதந்திரம்: ஊடகங்கள் ஒரு சிலரின் கட்டுப்பாட்டில் இருப்பதைத் தடுத்து அதன் சுதந்திரத்தை உறுதி செய்தல். உலகின் சரிபாதி மக்கள் தொகையினரிடம் (4.1 பில்லியன் மக்கள்) உள்ள மொத்த சொத்துக்களுக்கு இணையான சொத்தை, வெறும் ஒரு சில கோடீஸ்வரர்கள் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஈட்டியுள்ளனர் என்பது சமூக சமநிலைக்கு விடுக்கப்பட்டுள்ள பெரும் எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

