General23 September 2025

இலங்கையின் முதியோருக்கான தேசிய கொள்கைக்கு அமைச்சரவை அனுமதி

காலத்திற்கு ஏற்றவகையில் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதியோருக்கான தேசிய கொள்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
 
இலங்கையின் சிரேஷ்ட பிரஜைகள் தொடர்பான தேசிய சமவாயம் மற்றும் தேசிய கொள்கைக்காக 2006 ஆம் ஆண்டில் அமைச்சரவை அனுமதி வழங்கியது. 
 
எனினும், மாறிவரும் காலத்திற்கு ஏற்ப இலங்கையின் சிரேஷ்ட பிரஜைகள் தொடர்பான தேசிய சமவாயம் மாற்றப்பட வேண்டும் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
 
அத்துடன், 2052 ஆம் ஆண்டில் 60 வயதுக்கு மேற்பட்ட சனத்தொகை 24.8 சதவீதம் வரை அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக அலகால் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
 
இதனால், முதியோர்களின் நலன் மற்றும் உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் அவசியமென அடையாளம் காணப்பட்டுள்ளது.
 
அதற்கமைய, அரச தேசிய கொள்கை வேலைச்சட்டகமான “மதிப்பு மிகுந்த சிரேஷ்ட பிரஜை, அர்த்தமுள்ள இளைப்பாறிய வாழ்வு” தொனிப்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டது.
 
இந்த நிலையில், முதியோருக்கு சமூகம், பொருளாதாரம், உடலியல் மற்றும் ஆன்மீக ரீதியான திருப்திகரமான வாழ்வுக்காக வசதிகளை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் தயாரிக்கப்பட்ட இலங்கையின் முதியோருக்கான தேசிய கொள்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Related Recomands
Hiru TV News | Programmes