General29 April 2026

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொழும்பில் மின்சார தொடருந்து சேவை!

கொழும்பு புறநகர் திட்டத்தின் (Colombo Suburban Railway Project) கீழ், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மின்சார தொடருந்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையே இன்று (29) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

அதன்படி, தற்போதுள்ள தொடருந்து சேவைக்கு இணையாக இந்த மின்சார தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும்.

இந்த தொடருந்து சேவை முதற்கட்டமாக களனிவெளி தொடருந்து மார்க்கத்தில் மருதானையிலிருந்து மாகும்புர வரையும், பிரதான மார்க்கத்தில் கொழும்பு கோட்டையிலிருந்து ராகம வரையிலும் கரையோர மார்க்கத்தில் கொழும்பு கோட்டையிலிருந்து பாணந்துறை வரையிலும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போதுள்ள அகலமான தண்டவாளப் பாதைகளுக்கு (Broad Gauge) பதிலாக, சர்வதேசத் தரத்திலான நியமப் பாதைகளாக (Standard Gauge) தொடருந்து தண்டவாளங்களை புனரமைப்பது குறித்தும் இதன்போது விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இந்த திட்டத்திற்கான நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்வது மற்றும் அதனை நடைமுறைப்படுத்தும் போது எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் குறித்து ஜனாதிபதி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்பக்கட்டப் பணிகளை 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தகலந்துரையாடலில் போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்புடன் தொடர்புடைய விடயங்கள் சார்ந்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
Related recommendation
Hiru TV News | Programmes