International21 August 2026

காஷ்மீர் குறித்து அமெரிக்கத் தூதரின் கருத்து: பாகிஸ்தான் கண்டனம்!

இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரைப் பற்றி அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்த கருத்துகளுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் உயர் அதிகாரியை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் உடனடியாக அழைத்து தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தெற்காசிய சிறப்புத் தூதருமான செர்ஜியோ கோர், ஜம்மு-காஷ்மீருக்கு மேற்கொண்ட முதல் பயணத்தின் போது, அந்த பிரதேசத்தை "இந்தியாவின் முக்கியமான பகுதி" என்று குறிப்பிட்டிருந்தார்.

2019-க்குப் பிறகு அமெரிக்கத் தூதர் ஒருவர் அங்கு மேற்கொண்ட முதல் தனிப்பட்ட பயணம் இதுவாகும்.

இந்தநிலையில், காஷ்மீர் என்பது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய பகுதி என்றும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவைத் தீர்மானங்களின்படி தீர்க்கப்பட வேண்டிய விவகாரம் என்றும் பாகிஸ்தான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

எனவே, தூதரின் இந்தக் கருத்து வோஷிங்டனின் நீண்டகாலக் கொள்கைக்கு எதிரானது என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

பிரித்தானிய ஆட்சிக் காலம் முடிவடைந்ததில் இருந்தே காஷ்மீர் விவகாரம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான சர்ச்சைக்குரிய பகுதியாகத் தொடர்கிறது.

காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாக இருந்து வருகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes