General23 September 2025

தமிழ் மக்களை அரசாங்கம் ஏமாற்றுகிறது, இயலுமான தீர்வுகளையேனும் வழங்கவில்லை - சாணக்கியன்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ள போதிலும், திருப்தியடைய கூடிய வேலைத்திட்டங்கள் எதனையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“ஒரு வருட பூர்த்தியில் ஜனாதிபதி என்ன செய்தார் என்று எவரேனும் கேள்வி எழுப்புவார்களாயின் அதற்கு பதிலளிக்க வேண்டும் என்பதற்காக அவசரமாக யாழ்ப்பாணத்திலும் கொழும்பில் இந்த மாத ஆரம்பத்தில் ஜனாதிபதி சில வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.

எவ்வாறாயினும், தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைக்கு கூறும்படியாக அரசாங்கம் எந்த தீர்வையும் முன்வைக்கவில்லை

சில பிரச்சினைக்கு ஒரு வருடத்தினுள் தீர்வு காணமுடியாது என்ற போதிலும் குறுகிய காலத்தின் தீர்க்கக்கூடிய பிரச்சினைகள் குறிப்பாக காணி தொடர்பான பிரச்சினைகளையேனும் அரசாங்கம் தீர்க்கவில்லை.

மயிலத்தமடு மேய்ச்சல் தரை தொடர்பான பிரச்சினைக்கு அரசாங்கம் நிரந்தர தீர்வை வழங்கவில்லை. இதற்கான முறையான வர்த்தமானியை அரசாங்க வெளியிட தாமதிக்குமாயின் இன முரண்பாடுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

அத்துடன், மனித உரிமை மீறல் தொடர்பான அரசாங்கத்தின் தீர்வு திட்டமும் ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது.

யாழ்ப்பாணத்தில் மைதான நிர்மாணம் முன்னெடுக்கப்படும் காணி அயுதம் மீட்கப்படுகிறது, செம்மணியில் என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன, அதற்கான எந்த தீர்க்கமான தீர்மானங்களையும் அரசாங்கம் இதுவரையில் முன்வைக்கவில்லை.

2025 இல் மாகாண சபை தேர்தலை நடத்துவதாக கூறி, இன்று வரை அதனை இழுத்தடிப்பு செய்கின்றனர், அதற்கான சட்டத்தையேனும் நிறைவேற்ற அரசாங்கம் முன்வரவில்லை

அரசாங்கம் வாக்குறுதியளித்தவாறு நிறைவேற்றதிகாரத்தை ஒழிப்பதற்கும். புதிய அரசியலமைப்பை நிறுவுவதற்குமான பேச்சுவார்த்தைகளை கூட அரசாங்கம் ஆரம்பிக்கவில்லை.

மக்களின் பிரச்சினை இருந்ததை விட மோசமான மட்டத்துக்கு சென்றுள்ளது. உலக வங்கியின் அறிக்கைக்கமைய, கடந்த வருடத்தில், முந்தைய ஆண்டுகளை விடவும் வேலையின்மை வீதம் அதிகரித்துள்ளது.

மக்களுக்கு தங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கையை கொண்டு செல்லமுடியாத நிலைமை உருவாகியுள்ளது.

அதேநேரம், அச்சுறுத்தல் குறித்த பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திரவுக்கு எதிராக நிலாவெளி காவல்நிலையத்திலும் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் ஒருவருக்கு எதிராக சந்திவெளி காவல்நிலையத்திலும் முறைப்பாடு உள்ள போதிலும் சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

காவல்துறையினர் மீது குற்றம் சுமத்தவில்லை. அரசியல் ஆதரவாளர் என்பதால் தமக்கு எதிராக விசாரணை இல்லை என குறித்த ஆதரவாளர் கூறிவருகிறார்.

கடந்த கால அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யமாட்டோம் என வெளிப்படையாக கூறியிருந்தது. இந்த அரசாங்கம் மக்கள் மீது கரிசனை இருப்பதாக கூறிக்கொண்டு ஏமாற்றிவருகிறது

எனவே, அரசாங்கமும் ஜனாதிபதியும் மக்களாணையை குறைமதிப்புக்கு உட்படுத்தாது, சிறந்த தீர்வுகளை வழங்க வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
Related Recomands
Hiru TV News | Programmes