General06 May 2026

மலையக தொடருந்து பாதை மீளமைப்புப் பணிகள் தீவிரம்!

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன, 'டிட்வா' (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான சேதங்களை அடுத்து, மலையக தொடருந்து பாதையை மீளமைக்கும் பணிகளின் முன்னேற்றத்தை பார்வையிடுவதற்கான கள விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

போக்குவரத்து அமைச்சின் தகவலின்படி, மலையக தொடருந்து பாதையை மீளமைப்பதற்கான பொறியியல் விசாரணைகள் மற்றும் வடிவமைப்புப் பணிகளை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) முன்னெடுத்து வருகிறது.

இந்த அனர்த்தத்தின் காரணமாக மருதானை முதல் பேராதனை வரையான பிரதான பாதையில் மண்சரிவுகள், மண் அரிப்பு, பாறைகள் சரிதல், பாலங்கள் மற்றும் மதகுகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் உள்ளிட்ட 97 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இவற்றில், 92 இடங்கள் தொடருந்து திணைக்களத்தின் முயற்சியால் ஏற்கனவே மீளமைக்கப்பட்டுள்ளதுடன், ரம்புக்வெல்ல மற்றும் கடுகன்னாவ ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட ஐந்து இடங்களில் தொடர்ந்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

மீளமைப்புப் பணியின் சிக்கலான தன்மைகளைக் கையாள்வதற்கும், உட்கட்டமைப்பின் நீண்டகால ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் விசேட பொறியியல் ஆய்வுகளை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டு வருவதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இந்தப் பணிகளுக்கு ஆதரவாக, பழுதுபார்ப்புக்குத் தேவையான மூலப்பொருட்களைக் கொண்டு செல்வதற்காக மே 3ஆம் திகதி முதல் ரம்புக்வெல மற்றும் கடிகமுவ ஆகிய இடங்களுக்கு இடையில் சேவை தொடருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது.

அத்துடன் மீளமைப்புப் பணிகள் சீராக நடைபெற்று வருவதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes