General25 June 2026

தாஜுதீன் மரணம் மற்றும் 'வெள்ளை வான்' கடத்தல்களுக்குப் பின்னால் அரச இயந்திரம்; அநாகரிக நாடாளுமன்றை நாகரிகமாக மாற்றுவோம்

கடந்த காலங்களில் அரங்கேறிய தாஜுதீன் மரணம் , உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான குண்டுவீச்சுகளுக்குப் பின்னணியில் அரச அதிகாரப் பின்னணியைக் கொண்ட ஒரு சிறிய குழுவே செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய ஜனாதிபதி,

நாட்டில் கடந்த காலங்களில் நிலவிய அநாகரிகமான அரசியல் மற்றும் நாடாளுமன்ற கலாசாரத்தை மாற்றி, நாட்டை நாகரிகமான பாதையில் கொண்டு செல்ல தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் நாட்டில் அச்சுறுத்தலாக விளங்கிய இலக்கத் தகடுகள் அற்ற 'வெள்ளை வான்' கடத்தல்கள் மற்றும் வீடுகள் உடைக்கப்படுவதற்கு எதிராகப் போராடியவர்கள் கடத்தப்பட்ட சம்பவங்களை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, இவை யாவும் சாதாரண சிவில் மோதல்கள் அல்லவெனவும், அரசியல் தேவைகளுக்காக அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட அநாகரிகமான குற்றங்கள் எனவும் சாடினார்.

சிறைச்சாலையிலுள்ள முக்கிய போதைப்பொருள் வியாபாரி ஒருவருடன் நாட்டின் முன்னணி அரசியல் தலைவர்கள் 92 தடவைகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

"குற்றவாளிகளைத் தண்டிப்பது பழிவாங்கல் அல்ல. மக்கள் எமக்கு வழங்கிய ஆணையின் முக்கிய நோக்கமே நாட்டை நாகரிகமானதாக மாற்றுவதாகும். இந்த நாடாளுமன்றம் மற்றவர்களின் தோலை உரிக்கும் இடமாக அன்றி, விவாதங்களை நடத்தும் நாகரிகமான இடமாக மாற வேண்டும்" என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் வலியுறுத்தினார்.

அதேவேளை நாடாளுமன்றத்தில் செங்கோலைத் தூக்கிக்கொண்டு ஓடுவது வீரச்செயல் அல்ல, அதுவொரு அநாகரீகமான செயல் என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களைப் போலன்றி, தற்போதைய அரசாங்கம் நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் புதியதொரு அரசியல் நாகரீகத்தை உருவாக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மூன்று, நான்கு தசாப்தங்களாக நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்கள் அரசியல்வாதிகளின் முழுமையான ஆதரவுடனும் பாதுகாப்புடனும் வளர்ந்துள்ளதாக ஜனாதிபதி குற்றம் சாட்டினார்.

80-களில் சாதாரண ஆயுதங்களுடன் இருந்த குற்றக் குழுக்கள், இன்று அதிநவீன தானியங்கி துப்பாக்கிகளைக் கையாளும் அளவுக்கு சர்வதேச வலையமைப்பாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இவற்றை ஒழிப்பது சில மாதங்களில் சாத்தியமில்லை எனினும், அரசாங்கம் இதற்கான கடுமையான மற்றும் நிலையான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகக் கூறினார். இலங்கை மண்ணில் இருந்து போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றக்குழுக்கள் முழுமையாக வேரோடு பிடுங்கி எறியப்படும் என அவர் உறுதியளித்தார்.

1979 ஆம் ஆண்டு தற்காலிகமாக கொண்டுவரப்பட்டு, கடந்த 46 வருடங்களாக மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டு வரும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) இந்த வருடத்திற்குள் முழுமையாக ரத்து செய்யப்படும் என ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

"பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக, மக்களின் மனித உரிமைகள் மற்றும் பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான மாத்திரம் வரையறுக்கப்பட்ட புதிய சட்டமூலம் மிக விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்."

கடந்த அரசாங்கத்தினால் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்ட இணைய பாதுகாப்புச் சட்டம் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் அச்சட்டத்தில் முழுமையான திருத்தங்களை மேற்கொள்வதற்குக் கடந்த திங்கட்கிழமை அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

தமது ஆட்சிக் காலத்தில் இதுவரை பொதுமக்களின் போராட்டங்களுக்கு எதிராக ஒரு முறை கூட நீர்த்தாரை பிரயோகமோ அல்லது கண்ணீர்ப்புகைப் பிரயோகமோ செய்யப்படவில்லை என்பதை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

"மக்களைப் பயமுறுத்தி ஆளும் காலம் முடிந்துவிட்டது. மக்கள் ஆட்சியாளரைக் கேள்வி கேட்கும் உரிமை கொண்ட முழுமையான ஜனநாயகம் நாட்டில் நிலைநாட்டப்பட்டுள்ளது. ஆனால், அதேநேரம் பிரஜைகளும் தங்களின் போராட்ட வடிவங்களில் நாகரீகத்தைப் பேண வேண்டும்."

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் செங்கோலைத் தூக்கிக்கொண்டு முரண்பட்ட போது, கடந்த காலங்களைப் போலன்றி ஆளும்கட்சி உறுப்பினர்கள் எவரும் வன்முறையில் ஈடுபடாது அமைதி காத்ததன் மூலம் சபை ஒழுக்கம் பாதுகாக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சபையில் அமைதியாக அமர்ந்திருந்த எதிர்க்கட்சியின் இரு உறுப்பினர்களுக்கும் தனது நன்றியினைத் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes