General27 July 2026

பண்டாரகம பகுதியில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

களுத்துறை - பண்டாரகம சுகாதார மருத்துவ அதிகாரிப் பிரிவில் டெங்கு பரவல் வேகமாக அதிகரித்து வருவதாகப் பண்டாரகம சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்த ஆண்டில் இதுவரை பண்டாரகம பகுதியில் 675 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அந்த பகுதியில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் விசேட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள், பூச்சியியல் அதிகாரிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினரின் பங்கேற்புடன் பண்டாரகம பகுதியில் வீடு வீடாகச் சென்று விசேட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆய்வின் போது, வீடு ஒன்றின் குளிர்சாதனப் பெட்டியின் பின் பகுதித் தட்டு மற்றும் தோட்டம் உட்பட ஆறு இடங்களில் நீர் தேங்கியிருந்தமையை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இதற்கமைய, டெங்கு கொசுக்கள் பெருகும் வகையில் சுற்றாடலைப் பேணியமைக்காக அந்த வீட்டின் உரிமையாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், டெங்கு கட்டுப்பாட்டு அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறிய பல வீடுகளுக்குச் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல்களை வழங்கவும் கடும் எச்சரிக்கை விடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes