General20 September 2026

வீதியில் கிடைத்த தங்க நகையைக் காவல்துறையிடம் ஒப்படைத்து உரிமையாளரிடம் சேர்த்த பொகவந்தலாவ இளைஞர்கள்

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் சென்ஜோன் டிலரி பகுதியில் தவறவிடப்பட்ட, சுமார் 3 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்கக் கைச்சங்கிலியைக் கண்டெடுத்த இளைஞர்கள் இருவர், அதனைப் பொகவந்தலாவ காவல் நிலைய பொறுப்பதிகாரி நுவான் மதுசங்கவிடம் ஒப்படைத்துள்ளனர்.

பொகவந்தலாவ பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி வாகனத்தில் பயணித்த ரமேஷ் பிருந்தன் மற்றும் மனோராஜ் ஆகிய இருவருக்கே இந்தத் தங்கச் சங்கிலி வீதியில் கிடைத்துள்ளது.

உடனடியாக அவர்கள் உரிய உரிமையாளரைக் கண்டறியும் நோக்கில் தமது பேஸ்புக்கில் இது குறித்துப் பதிவிட்டனர். அதனைத் தொடர்ந்து, உரிமையாளர் அடையாளம் காணப்பட்டு காவல்நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு குறித்த நகை ஒப்படைக்கப்பட்டது.

குறித்த தங்கக் கைச்சங்கிலியின் உரிமையாளர் பொகவந்தலாவ கிவ் தோட்டப் பகுதியைச் சேர்ந்தவராவார்.

கால்நடை வளர்ப்பு மூலமாகச் சிறுகச் சிறுகச் சேமித்து வாங்கிய இந்தத் தங்கக் கைச்சங்கிலியை, தமது தேவைக்காக ஹட்டன் நோக்கிச் சென்றபோதே தவறவிட்டதாகக் குறிப்பிட்ட உரிமையாளர், நகையை மீட்டுத் தந்த இளைஞர்களின் மனிதநேயத்தை வாழ்நாளில் மறக்க முடியாது எனக் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes