General20 September 2026

ஐ.நா பொதுச்செயலாளர் போட்டியிலிருந்து மிஷேல் பெச்லெட் விலகினார்!

இலங்கையின் மனித உரிமைகள் விவகாரங்களில் தீவிர கவனம் செலுத்தி வந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் உயர்ஸ்தானிகரும், சிலியின் முன்னாள் ஜனாதிபதியுமான மிஷேல் பெச்லெட் (Michelle Bachelet), ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த பொதுச்செயலாளருக்கான போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

ஐ.நாவின் 80 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் பொதுச்செயலாளராகும் முயற்சியில் ஈடுபட்டிருந்த 74 வயதான மிஷேல் பெச்லெட், போதிய ஆதரவு கிடைக்காததைத் தொடர்ந்து போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அண்மையில் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக ஒரு வாக்கும், எதிராக 11 வாக்குகளும், நடுநிலையாக 3 வாக்குகளும் மட்டுமே கிடைத்துள்ளன. இதனைத் தொடர்ந்தே இந்தப் போட்டியிலிருந்து விலகும் தீர்மானத்தை அவர் எடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) உயர்ஸ்தானிகராகப் பணியாற்றிய காலத்தில், இலங்கையின் போர்க்காலப் பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் நிலைமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் பல முக்கியமான அறிக்கைகளைச் சமர்ப்பித்து, இலங்கையின் விவகாரங்களில் மிஷேல் பெச்லெட், சர்வதேச அளவில் மிக முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின் பதவிக்காலம் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில், அவருக்குப் பதிலாக புதிய பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் கொஸ்டாரிக்காவின் ரெபெகா கிரின்ஸ்பன் (Rebeca Grynspan) மற்றும் கயானாவின் கரோலின் ரோட்ரிக்ஸ் (Carolyn Rodrigues-Birkett) ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes