சர்வதேச நாணய நிதியத்தின் ஏழாவது மீளாய்வு மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான நான்காவது சரத்து ஆலோசனை தொடர்பில், சர்வதேச நாணய நிதியமும் இலங்கை அதிகாரிகளும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.
ஏழாவது மீளாய்வை நிறைவு செய்வதற்குத் தேவையான கொள்கைகள் மற்றும் அளவுகோல்கள் தொடர்பில் உடன்பாட்டை எட்டும் நோக்கில், எதிர்வரும் காலப்பகுதியில் பேச்சுவார்த்தைகள் தொடரும் என அந்த நிதியம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் தொடர்ச்சியான அதிர்ச்சிகளுக்கு மத்தியிலும் வலுவான மீட்சியை வெளிப்படுத்தி வருவதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பொருளாதாரம் 4.2 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், தொடர்ந்து 11 காலாண்டுகளாக பொருளாதார வளர்ச்சி பதிவாகியுள்ளது.
எனினும், மத்திய கிழக்குப் போரின் கால அளவு மற்றும் தீவிரம் குறித்த நிச்சயமற்ற நிலை, உலகளாவிய வர்த்தகக் கொள்கைகள் மற்றும் எல் நினோவின் தாக்கம் உள்ளிட்ட காரணிகளால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு எதிர்மறையான அபாயங்கள் தொடர்வதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் உலகளாவிய எண்ணெய் விலை அதிர்ச்சியின் காரணமாக இலங்கையின் பணவீக்கம் எட்டு சதவீதமாக அதிகரித்துள்ள போதிலும், பணவீக்க எதிர்பார்ப்புகள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ மொத்த வெளிநாட்டு கையிருப்பு 6.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
வங்கிகள் போதுமான மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், இலாபகரமாகவும் இயங்கி வருவதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்கான நடுத்தர கால மூலோபாயத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்துவது, வரி வசூல் முறையை மேம்படுத்துவது, வரி அடித்தளத்தை விரிவுபடுத்துவது மற்றும் வரி விலக்குகள் மற்றும் சலுகைகளை மறுசீரமைப்பது அவசியம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், அரச நிறுவனங்களால் ஏற்படக்கூடிய நிதி அபாயங்களைக் குறைப்பதற்காக எரிசக்தி விலையை செலவு மீட்பு அடிப்படையில் தொடர்ந்து பேணுவது முக்கியம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
மூலதனச் செலவினங்களை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் தடைகளை நீக்குவதுடன், டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பணவீக்க இலக்கீட்டு கட்டமைப்பின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது நடைமுறையில் உள்ள ஐந்து சதவீத பணவீக்க இலக்கையும், அதற்கான பொறுப்புக்கூறல் வரம்பையும் தொடர்ந்து பேணுவது பொருத்தமானது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
குறைந்த மற்றும் நிலையான பணவீக்கத்தைப் பேணுவதற்கான சாதனை உருவாக்கப்பட்ட பின்னர், அடுத்த மீளாய்வின்போது குறைந்த பணவீக்க இலக்கை நோக்கி நகர்வது குறித்து பரிசீலிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊழல் எதிர்ப்பு சட்டக் கட்டமைப்பின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பது பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்க மிகவும் முக்கியமானது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
அண்மையில் முன்வைக்கப்பட்ட சட்டத் திருத்தங்களில் சில பிரிவுகள் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை பலவீனப்படுத்தக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியக் குழு யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்து வடக்கு மாகாணத்தின் பொருளாதார ஆற்றல் குறித்து ஆராய்ந்துள்ளது.
விவசாயம், மீன்பிடி, சுற்றுலா மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 10ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்த சர்வதேச நாணய நிதியக் குழுவுக்கு எவன் பப்பஜியோர்ஜியோ (Evan Papageorgio) தலைமை தாங்கினார்.
ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட அரசாங்க மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளுடன் சர்வதேச நாணய நிதியக் குழு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது.
ஏழாவது மீளாய்வை உரிய காலத்தில் நிறைவு செய்வதற்கான பணியாளர் மட்ட உடன்பாட்டை விரைவில் எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பணிக்குழுத் தலைவர் இவான் பபகியோர்ஜியோ (Evan Papageorgio) தலைமையிலான குழுவினர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்துள்ளனர்.
இதன்போது, சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் ஏழாவது மீளாய்வு தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
வெளிப்புற அழுத்தங்கள் இருந்தபோதிலும், பொருளாதார ஸ்திரத்தன்மையை தொடர்ந்து பேணுவதற்கு அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஊழல் தடுப்புச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறிப்பாக, கையூட்டல் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் சொத்து பிரகடனத் தகவல்களில், தனியுரிமை மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு இடையில் சமநிலையை பேணுவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
Latest News
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
Local
23 September 2026
உயிர்த்த ஞாயிறு வழக்கு - முக்கிய புள்ளிகளிடம் விசாரணை நடத்த வலியுறுத்தல்
Local
23 September 2026
வெலிகம அஞ்சல் நிலையத்தில் ரூ. 21 இலட்சம் மாயம்? – அஞ்சல் திணைக்களம் விசாரணை
Local
23 September 2026
நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலை
Local
23 September 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - சதித்திட்டம் தீட்டியவர்களுக்கு தண்டனை: தடுக்கத் தவறியவர்களுக்கு என்ன?
Local
23 September 2026
IMF உடனான 7ஆவது மீளாய்வு பேச்சுவார்த்தை நிறைவு: இலங்கை பொருளாதார வளர்ச்சி குறித்து சாதகமான மதிப்பீடு!
Local
23 September 2026
இந்தியா – இலங்கை உறவுகள்: இந்திய நாடாளுமன்ற நிலைக்குழுவின் முக்கிய முடிவு
Local
23 September 2026
சாரதி அனுமதிப்பத்திர மருத்துவச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான புதிய டிஜிட்டல் முறைமை நாளை முதல் அறிமுகம்!
Local
23 September 2026
ரஜினிகாந்த் வீட்டின் முன்புறத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 'பாபா' முத்திரை: ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு!
Local
23 September 2026
சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு மீண்டும் நிராகரிப்பு - தொடர்ந்தும் விளக்கமறியலில்!
Local
23 September 2026