மரங்களை கட்டியணைத்து கதறியழும் பெண் விவசாயி!

Sunday, 09 August 2026 - 15:42

%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%21
தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டம் வட தொரசலூர் கிராமத்தில் உயர் மின்னழுத்த கோபுரப் பாதை அமைக்கும் திட்டத்துக்காக, 10 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்க்கப்பட்ட பல மரங்கள் அடியோடு வெட்டிச் சாய்க்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான செல்வி என்பவர், கணவரை இழந்த நிலையில் தனது மகனும் மருத்துவருமான பாலமுருகனுடன் இணைந்து, தனது நிலத்தில் மா, தேக்கு, மகோகனி, பப்பாளி உள்ளிட்ட பல மரங்களை இயற்கை முறையில் பண்ணை அமைத்துப் பராமரித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த பகுதியில் உயர் மின்னழுத்த மின்பாதை அமைக்கும் திட்டத்துக்காக அதிகாரிகள் ஆய்வு செய்ய வந்தபோதே, 10 ஆண்டுகளாக வளர்த்த மரங்களைக் காப்பாற்ற மின்பாதையைக் கொஞ்சம் தள்ளி அமைத்துத் தருமாறு செல்வியின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதற்கமைய, அதிகாரிகளும் அதனைப் பரிசீலிப்பதாக உறுதியளித்திருந்தனர்.

இந்த நிலையில், எவ்வித முன்னறிவிப்போ அல்லது முறையான இழப்பீடோ வழங்கப்படாமல், பெருமளவிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டு காணி சுற்றி வளைக்கப்பட்டு, மரங்கள் அடியோடு வெட்டிச் சாய்க்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தனது கண்முன்னே மரங்கள் வெட்டப்படுவதை அவதானித்த குறித்த பெண், ஓடிச் சென்று மரத்தைக் கட்டியணைத்துக் கொண்டு கதறி அழுதார். எனினும், காவல்துறையினர் அவரை தூக்கி அப்புறப்படுத்தி மரங்களை வெட்டியுள்ளனர்.

தங்கள் தரப்பு நியாயத்தைக் கேட்காமல் அதிகாரிகளும் காவல்துறையினரும் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டு மரங்களை அழித்துவிட்டதாகப் பாதிக்கப்பட்ட பெண் விவசாயி வேதனையுடன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்தப் பெண், சில ஆண்டுகளுக்கு முன்பு பாடசாலை கட்டுவதற்காக ஒரு பகுதி காணியை அரசுக்கு தானமாக அளித்திருந்தார் எனவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.