General30 January 2026

தனது அரசாங்கத்தையே நீதிமன்றிற்கு இழுத்த ட்ரம்ப் : உலகையே வியக்க வைத்த அமெரிக்க ஜனாதிபதியின் முடிவு

தனது முதல் ஜனாதிபதி பதவிக் காலத்தில் (2019-2020), தனது தனிப்பட்ட வரி அறிக்கைகள் அங்கீகாரமின்றி ஊடகங்களுக்கு கசிந்ததாகக் கூறி, அமெரிக்க உள்நாட்டு வருவாய் சேவை மற்றும் திறைசேரி திணைக்களம் ஆகியவற்றிற்கு எதிராக டொனால்ட் ட்ரம்ப் வழக்குத் தொடர்ந்துள்ளார். 
 
இதன்மூலம் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகையை ட்ரம்ப் நஷ்டஈடாகக் கோரியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
 
இந்த வழக்கு நேற்று (29) புளோரிடா மாநிலத்தின் பெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. டொனால்ட் ட்ரம்ப் இந்த வழக்கை தனது புதல்வர்களான டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் மற்றும் எரிக் ட்ரம்ப் ஆகியோருடன் இணைந்து தாக்கல் செய்துள்ளார். 
 
இது ஜனாதிபதி என்ற உத்தியோகபூர்வ மட்டத்திலன்றி, ஒரு தனிநபர் என்ற ரீதியிலேயே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க உள்நாட்டு வருவாய் சேவையின் முன்னாள் ஒப்பந்ததாரரான சார்லஸ் லிட்டில்ஜோன் என்பவர், ட்ரம்பின் வரி விபரங்களை சட்டவிரோதமாகப் பெற்று ஊடகங்களுக்கு வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 
 
இந்தச் சம்பவம் அம்பலமானதைத் தொடர்ந்து, லிட்டில்ஜோன் பணிபுரிந்த தனியார் நிறுவனத்துடன் அமெரிக்க அரசாங்கம் கொண்டிருந்த 21 மில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தங்களை ஏற்கனவே ரத்து செய்திருந்தது. 
 
தனது ரகசியத் தகவல்களைப் பாதுகாக்கத் தவறியதன் மூலம் அரசாங்கம் தனக்கு பாரிய நிதி மற்றும் நற்பெயர் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக ட்ரம்ப் வாதிடுகிறார். 
 
அமெரிக்க வரலாற்றில் பதவியில் உள்ள ஒரு ஜனாதிபதி, தான் தலைமை வகிக்கும் அரசாங்கத்தின் கீழ் உள்ள திணைக்களங்களுக்கு எதிராகவே பில்லியன் கணக்கில் நஷ்டஈடு கோரி வழக்குத் தொடந்துள்ளமை ஒரு அரிதான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
Related Recomands
Hiru TV News | Programmes