International12 June 2026

அமெரிக்காவுக்கு இந்தியாவின் அவசர கோரிக்கை!

இந்திய மாலுமிகளைக் கொண்ட வணிகக் கப்பல்கள் மீது அமெரிக்கா நடத்திய மூன்று தாக்குதல்களில், மூன்று மாலுமிகள் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து, கப்பல்கள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்காவை இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஈரானுடன் தொடர்புடைய கப்பல் போக்குவரத்து மீது கடந்த ஏப்ரல் 13ஆம் திகதியன்று அமெரிக்கா விதித்த கடல்சார் முற்றுகைக்குப் பிறகு பதிவான முதல் உயிரிழப்புகள் இவையாகும்.

இந்த முற்றுகையின் கீழ் இதுவரை அமெரிக்கப் படைகள் 8 கப்பல்களைச் செயலிழக்கச் செய்துள்ளதுடன், 100க்கும் மேற்பட்ட கப்பல்களைத் திருப்பி அனுப்பியுள்ளன.

இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் கருத்துரைத்துள்ளார்.

தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பிராந்தியத்தில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் விரைவில் திரும்புவதற்கு ஏதுவாக, பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர முயற்சிகளுக்கு இந்தியா அழைப்பு விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை நடந்த ஒரு தாக்குதல் உட்பட, இந்த வாரத்தில் மட்டும் இந்திய மாலுமிகளைக் கொண்ட மூன்று கப்பல்களை அமெரிக்க கடற்படை தாக்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, ஓமான் கடற்பரப்பிற்கு அப்பால் 'செட்டபெல்லோ' என்ற எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தை அடுத்து, புதுடில்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரியை அழைத்த இந்தியா தனது "கடுமையான கவலைகளை" தெரிவித்துள்ளதாக ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்கப் படைகளின் உத்தரவுகளுக்குக் கப்பல் ஊழியர்கள் மீண்டும் மீண்டும் கீழ்ப்படியத் தவறியதால், 'செட்டபெல்லோ' கப்பலின் இயந்திர அறையைக் குறிவைத்து துல்லியமான வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.

அத்துடன் இந்தக் கப்பல் ஈரானில் இருந்து எண்ணெயைக் கொண்டு செல்ல முயன்றதன் மூலம் தற்போதைய முற்றுகைச் சட்டத்தை மீறியுள்ளது என்றும் அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளையகம் கூறியுள்ளது.

எனினும், அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டுகளைக் கப்பலை நிர்வகிக்கும் நிறுவனம் முற்றாக மறுத்துள்ளது.

தாங்கள் எவ்வித எச்சரிக்கைகளையும் புறக்கணிக்கவில்லை என்றும், ஈரானிய மசகு எண்ணெயை ஏற்றிச் செல்லவில்லை என்றும் கூறியுள்ள அந்த நிறுவனம், இது குறித்து வெளிப்படையான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes