General18 June 2026

உலகக் கிண்ணக் கால்பந்து : உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி கொலம்பியா அபார வெற்றி

உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் குழு K க்கான லீக் போட்டியில் உஸ்பெகிஸ்தான் அணியை 3 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கொலம்பியா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

மெக்சிகோ சிட்டி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் ஆரம்பம் முதலே கொலம்பியா அணி ஆதிக்கம் செலுத்தியது.

போட்டியின் 40 ஆவது நிமிடத்தில் கொலம்பியா அணியின் டேனியல் முஞோஸ் (Daniel Muñoz) முதலாவது கோலை அடித்துத் தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

இதனால் முதற்பாதி ஆட்டம் 1 - 0 என கொலம்பியாவுக்கு சாதகமாக நிறைவடைந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விறுவிறுப்பான இரண்டாம் பாதி ஆட்டத்தின் 60 ஆவது நிமிடத்தில், உஸ்பெகிஸ்தான் அணியின் அப்போஸ்பெக் ஃபாய்குல்லாயேவ் (Abbosbek Fayzullaev) ஒரு கோலை அடித்து ஆட்டத்தைச் சமநிலைக்குக் கொண்டு வந்தார்.

எனினும், அடுத்த சில நிமிடங்களிலேயே கொலம்பியா அணியின் நட்சத்திர வீரர் லூயிஸ் டயஸ் (Luis Díaz) ஒரு கோலை அடித்து மீண்டும் அணியை முன்னிலைப்படுத்தினார்.

ஆட்டத்தின் மேலதிக நேரத்தில் கொலம்பியாவின் ஜமிண்டன் காம்பாஸ் (Jaminton Campaz) மற்றுமொரு கோலை அடிக்க, கொலம்பியா அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றியை உறுதி செய்தது.

இந்த வெற்றியின் மூலம் கொலம்பியா அணி குழு K இன் புள்ளிகள் பட்டியலில் 3 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes