General18 June 2026

மருத்துவர் என ஏமாற்றி 6 கோடி ரூபாய் மோசடி - போலி பெண் மருத்துவர் கைது!

மேற்கத்தேய (ஆங்கில) மற்றும் ஆயுர்வேத மருத்துவர் எனப் போலியாக நடித்து, பொதுமக்களை ஏமாற்றி சுமார் 6 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த பெண் ஒருவரை ஹொரண பிராந்திய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கிரிபாவ பகுதியைச் சேர்ந்தவரான 53 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சமீபகாலமாக ஹொரண பகுதியில் உள்ள வீட்டுத் தொகுதி ஒன்றில் வசித்து வந்துள்ளார்.

காவல்துறை விசாரணைகளின்படி, சந்தேகநபர் நீண்டகாலமாக இந்த மோசடிச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இவர் மக்களை நம்ப வைப்பதற்காக, வாடகைக்கு சொகுசு கார்களைப் பெற்று, அவற்றில் மருத்துவ இலச்சினையைக் காட்சிப்படுத்தியுள்ளார். அவ்வாகனங்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று இலவச மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளார்.

பல்வேறு நோய்களுக்காக வெளிநாடுகளில் இருந்து பிரத்தியேக மருந்துகளை இறக்குமதி செய்வதாகக் கூறி நோயாளிகளின் நம்பிக்கையை வென்றுள்ளார். எனினும், அவர் இலங்கையில் பயன்படுத்த அனுமதி பெறப்படாத, தரம் குறைந்த மருந்துகளையே நோயாளிகளுக்கு வழங்கியுள்ளார் என்பதும் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து தான் ஓடர் செய்த மருந்து கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகவும், அவற்றை விடுவிப்பதற்குப் பணம் தேவைப்படுவதாகவும் கூறி மக்களை ஏமாற்றியுள்ளார். பின்னர், பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறி கடந்த ஒன்றரை வருடங்களாகப் பல்வேறு நபர்களிடமிருந்து சுமார் 6 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளார்.

கம்பஹா, மதுராவல, மில்லனிய, பண்டாரகம, ஹொரண மற்றும் இங்கிரிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சாதாரண பொதுமக்கள் மட்டுமன்றி, அந்த பகுதிகளில் உள்ள பிரபல விகாரைகளில் வசிக்கும் தலைமைத் தேரர்களையும் ஏமாற்றி இவர் பணத்தைப் பெற்றுள்ளதாக காவல்துறையினருக்கு புகார்கள் கிடைத்துள்ளன.

இவரது மருத்துவத் தகைமைகள் குறித்துச் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், இலங்கை மருத்துவச் சபை மற்றும் ஆயுர்வேத மருத்துவச் சபை ஆகியவற்றில் விசாரணை நடத்தியுள்ளனர். இதன்போது, அவர் எந்தவொரு மருத்துவச் சபையிலும் பதிவு செய்யப்படாத ஒரு போலி மருத்துவர் என்பது உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது.

மோசடி செய்யப்பட்ட கோடிக்கணக்கான பணத்திற்கு என்ன நடந்தது என்பது இதுவரை கண்டறியப்படாத போதிலும், சந்தேகநபரின் பெயரில் இரண்டு போலி நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

அந்தப் போலி நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி, மோசடி செய்த பணத்தை டொலர்களாக மாற்றி, வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வது போல் காட்டி வெளிநாடுகளுக்குக் கடத்தியுள்ளாரா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஹொரண பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஷான் டி சில்வா மற்றும் உதவி காவல்துறை அத்தியட்சகர் பி.எம்.ஏக்கநாயக்க ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், ஹொரண விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான காவல்துறை குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes