General22 June 2026

இலங்கையில் மே மாதத்தில் பணவீக்கம் 5.4 சதவீதமாக அதிகரிப்பு!

இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் அடிப்படையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் 4.7 சதவீதமாகக் காணப்பட்ட நாட்டின் முதன்மை பணவீக்கம் மே மாதத்தில் 5.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்தத் தரவுகள், நாடு முழுவதும் வாழ்க்கைச் செலவினங்கள் மீதான அழுத்தம் தொடர்வதை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளன.

2021ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு ஒட்டுமொத்த விலை மாற்றங்களை அளவிடும் தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண், கடந்த ஏப்ரல் மாதத்தில் 216.3 ஆகப் பதிவாகியிருந்த நிலையில், மே மாதத்தில் அது 218.8 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்போதைய பணவீக்கத் தரவுகளின்படி, உணவு மற்றும் உணவுசாரா வகைகளுக்கு இடையே தெளிவான வேறுபாடுகள் காணப்படுகின்றன.

அதன்படி, ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் ஏப்ரலில் 1.1 சதவீதமாக காணப்பட்ட உணவுப் பணவீக்கம் மே மாதத்தில் 1.5 சதவீதம் என்ற ஒப்பீட்டளவில் குறைந்த மட்டத்திலேயே அதிகரித்துள்ளது.

எனினும், உணவுசாரா பணவீக்கமானது, 7.8 சதவீதத்திலிருந்து 8.6 சதவீதமாக கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

மே மாதத்தில் நாட்டின் ஒட்டுமொத்தப் பணவீக்க உயர்வுக்கு இந்த உணவுசாரா பிரிவே முதன்மைக் காரணியாக அமைந்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes