General24 June 2026

"ராஜபக்சக்களின் கனவு நகரமும், சஜித்தின் பெட்டி வீடுகளுமே ஹம்பாந்தோட்டை யானை அச்சுறுத்தலுக்குக் காரணம்!"

கடந்த கால ஆட்சியாளர்களின் சுயநல மற்றும் திட்டமிடப்படாத 'கனவு நகர' திட்டங்களினாலேயே தற்போது ஹம்பாந்தோட்டை மக்கள் மிக மோசமான யானை-மனித மோதல்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து உரையாற்றிய பிரதி அமைச்சர் எரங்க குணசேகர,

"கடந்த காலங்களில் நாட்டை ஆண்ட ராஜபக்சக்கள் ஹம்பாந்தோட்டையில் ஒரு கனவு உலகை உருவாக்க நினைத்து, அங்கிருந்த ஒட்டுமொத்த காடுகளையும் இயற்கைச் சூழலையும் அழித்தார்கள்.

அதேபோல், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடந்த காலத்தில் வீடமைப்பு அமைச்சராக இருந்தபோது, யானைகளின் இயற்கை வாழ்விடங்களையும், யானை வழித்தடங்களையும் மறித்து, காடுகளுக்குள் பெட்டி பெட்டியாக வீடுகளைக் கட்டிக் கொடுத்தார்.

அரசியல்வாதிகள் கட்டிய பெட்டி வீடுகள் பற்றி யானைகளுக்குத் தெரியாது. அதன் விளைவைத்தான் தற்போது அப்பாவி மக்கள் அநுபவிக்கிறார்கள்"

"கடந்த கால ஆட்சியாளர்களின் காலத்தில், 2011 ஆம் ஆண்டில் உலகிலேயே சுற்றுச்சூழலை மிக மோசமாக அழிக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 4-வது இடத்தைப் பிடித்திருந்தது.

அப்போது ஒரு நாளைக்கு ஒரு ஏக்கர் என்ற வீதத்தில் காடுகள் அழிக்கப்பட்டன. கோட்டாபய ராஜபக்ச 'கிராமத்துடன் உரையாடல்' என்று நாடகம் ஆடியபோது, அவரது ஆதரவாளர்கள் பின்னாலேயே டோசர்களை எடுத்துக்கொண்டு சென்று காடுகளை அழித்தார்கள்.

உலக பாரம்பரியமிக்க சிங்க ராஜ வனத்தின் நடுவே வீதி அமைத்ததை தைரியமாக வெளிப்படுத்திய ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட கறுப்பு வரலாறு அன்று காணப்பட்டது என அவர் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes