General30 June 2026

"எரிபொருள் விலை குறைந்தாலும் மண்ணெண்ணெய் விலை குறையவில்லை!" - தமக்குரிய மானியம் யாருடைய பைகளுக்கு சென்றது என கடற்றொழிலாளர்கள் கேள்வி

அரசாங்கத்தினால் அண்மையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்ட போதிலும், மண்ணெண்ணெய் விலை குறைக்கப்படாமை மற்றும் தமக்கு வழங்கப்படவிருந்த மானியங்கள் இதுவரை கிடைக்கப்பெறாமை குறித்து
கடற்றொழிலாளர்கள் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சில எரிபொருள் வகைகளின் விலையைக் குறைத்து திருத்தம் மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் 95 ஒக்டேன் பெட்ரோல் (495 ரூபா), லங்கா சுப்பர் டீசல் (478 ரூபா) மற்றும் மண்ணெண்ணெய் (285 ரூபா) ஆகிய எரிபொருள் வகைகளின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கடற்றொழிலாளர்கள்  ,

"நேற்று இரவு முதல் பெட்ரோல் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்ததாகக் கூறினாலும், எமது வாழ்வாதாரத்திற்குத் தேவையான மண்ணெண்ணெய் விலை குறைக்கப்படவில்லை. மண்ணெண்ணெய் விலை குறையாததால் எம்மால் தொழிலுக்குச் செல்ல முடியாமல் படகுகள் அனைத்தும் கரையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன" என கடற்றொழிலாளர் ஒருவர் கவலை தெரிவித்தார்.

"கடற்றொழிலாளர்களுக்காக மில்லியன் கணக்கில் மண்ணெண்ணெய் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். அதற்கான விண்ணப்பப் படிவங்களையும் அதிகாரிகள் எங்களிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.

ஆனால், இதுவரை அந்த மானியத் தொகை எங்களுக்குக் கிடைக்கவில்லை. அரசாங்கம் ஒதுக்கிய அந்தப் பணம் யாருடைய பைகளுக்கு சென்றது என்று தெரியவில்லை" என அவர்கள் குற்றம் சாட்டினர்.

யுத்தத்தைக் காரணம் காட்டி நாட்டில் ஏற்கனவே இருந்த எரிபொருட்களின் விலைகளை உயர்த்திய அதிகாரிகள், இப்போது மக்களுக்குரிய நிவாரணங்களை வழங்கத் தயங்குவதாக கடற்றொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, இந்த மானியப் பணம் குறித்து ஜனாதிபதி உடனடியாக விசாரணை நடத்தி, தமக்குரிய நிவாரணங்களை விரைவாகப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes