General19 July 2025

அதானியின் திட்டங்களை நிறுத்தியமைக்கு ரூ. 500 மில்லியனை இலங்கை செலுத்த வேண்டும்

அதானி நிறுவனத்தின் இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நிறுத்தியமை தொடர்பில் 300-500 மில்லியனை இலங்கை மீள் செலுத்த வேண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
விலை நிர்ணயம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி திட்டங்களிலிருந்து விலகியது. 
 
இந்த ஆண்டு மே மாதம் திட்டத்திலிருந்து விலகுவதாக அறிவித்து திட்டத்தை செயல்படுத்துவதற்காக இங்கு ஏற்பட்ட ஆரம்ப செலவுகளை திருப்பிச் செலுத்துமாறு கோரி கடிதம் அனுப்பப்பட்டது. 
 
பின்னர், எரிசக்தி அமைச்சின் வேண்டுகோளின் பேரில், இலங்கை நிலைபேறுதகு வலு அதிகாரசபை, இந்திய நிறுவனம் கோரியபடி பணம் செலுத்த வேண்டுமா என்பது குறித்து சட்ட ஆலோசனையை நாடியது. 
 
சில செலவுகளுக்கான திருப்பிச் செலுத்துதலுக்கான சட்ட ஆலோசனை நேற்று பெறப்பட்டதாகவும், இதற்கான மொத்தத் தொகை ரூ.300 முதல் 500 மில்லியன் வரை இருக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
 
எரிசக்தி அனுமதிக்கு அதானி செலுத்திய தொகையை எந்த சூழ்நிலையிலும் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை என்று இலங்கை நிலைபேறுதகு வலு அதிகாரசபை உறுதியாகக் கூறுகிறது. 
 
இருப்பினும், அடுத்த சில மாதங்களுக்குள் சட்டமா அதிபரின் ஆலோசனை மற்றும் அதிகாரசபையின் பணிப்பாளர் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு, திருப்பிச் செலுத்தும் தொகையின் சரியான தொகை தீர்மானிக்கப்படும். 
 
இந்த நிறுவனம் வட மாகாணத்தில் மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி நிலைய திட்டங்களை நிர்மாணிப்பதற்கு 442 மில்லியன் டொலர்களை முதலீடு செய்யுமெனவும் இந்தத் திட்டம் 2025 ஆம் ஆண்டுக்குள் தேசிய மின் கட்டமைப்பில் குறைந்தது 350 மெகாவாட் மின்சாரத்தை சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
Related Recomands
Hiru TV News | Programmes