General19 November 2025

மலையகத் தொடருந்து சேவையில் மாற்றம்: நேர அட்டவணை திருத்தம்

கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் இயங்கும் பொடி மெனிகே மற்றும் உடரட்ட மெனிகே உள்ளிட்ட மலையக மார்க்கத்தின் தொடருந்து சேவை நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நேற்று (18) இரவு பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற அஞ்சல் தொடருந்து, இதல்கஸ்ஹின்ன - ஒஹிய தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தொடருந்து பாதைக்குச் சரிந்த மண் மேட்டுடன் மோதி தடம் புரண்டதன் காரணமாகவே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மலையக தொடருந்து சேவை பாதை இதல்கஸ்ஹின்னக்கும் ஒஹியவுக்கும் இடையில் தடைப்பட்டுள்ளது.

இந்த நிலைமை காரணமாக, மலையக தொடருந்து சேவை தற்போது கொழும்பு கோட்டை- நானுஓயா மற்றும் பதுளை - பண்டாரவளைக்கிடையில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தடம் புரண்ட தொடருந்தை மீள் தடமேற்றி, பாதையைச் சீரமைக்கும் பணிகளை தொடருந்து திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

இந்தச் சீரமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை இன்று (19) தொடருந்து சேவையின் நேர அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, பதுளை - தெமோதரை - பண்டாரவளைக்கிடையில் இன்று இயங்கும் Calypso சுற்றுலா தொடருந்து வழமைபோல இயங்கும்.

பதுளையிலிருந்து புறப்படவிருந்த பொடி மெனிகே மற்றும் உடரட்ட மெனிகே தொடருந்துகள் இன்று பதுளை - நானுஓயாவுக்கு இடையில் இயங்காது.

உடரட்ட மெனிகே தொடருந்து நானுஓயாவிருந்து காலை 9:23க்கு கொழும்பு கோட்டை நோக்கிப் புறப்பட திட்டமிடப்பட்டது.

பொடி மெனிகே தொடருந்து நானுஓயாவிலிருந்து பிற்பகல் 12:13 க்கு கொழும்பு கோட்டை நோக்கிப் புறப்படும்.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் செல்லும் பொடி மெனிகே (காலை 05:55) மற்றும் உடரட்ட மெனிகே தொடருந்துகள் இன்று நானுஓயா வரை மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

உடரட்ட மெனிகே தொடருந்து இன்று மாத்திரம் கொழும்பு கோட்டையிலிருந்து காலை 9:45 இற்கு புறப்படும்.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி காலை 9:45 இற்கு புறப்படவிருந்த இலக்கம் 1007 கொண்ட தொடருந்து இன்று இரத்து செய்யப்பட்டுள்ளது.

பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி காலை 10:20 க்கு புறப்படவிருந்த இலக்கம் 1008 கொண்ட தொடருந்து இன்று இரத்து செய்யப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்த பயணிகளுக்கான அறிவித்தல்

இரத்து செய்யப்பட்ட தொடருந்துகளில் ஆசனங்களை முற்பதிவு செய்த பயணிகள், முன்பதிவு செய்யும் வசதியுள்ள எந்தவொரு தொடருந்து நிலையத்திலிருந்தும் தமது பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes