General26 November 2025

வீட்டின் உரிமையாளருக்கு மனமுடைந்து கடிதம் எழுதிய திருடன்

இந்தியாவின், நெல்லையில் வீட்டை உடைத்து ஒருவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 
 
மதுரையில் உள்ள ஒரு வங்கியில் ஜேம்ஸ் பால் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். 
 
அவர் பணிக்கு சென்று வீடு திரும்பிய போது அவரின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதும் வீட்டிலிருந்த ரூ. 25 ஆயிரம் பணம் திருட்டு போயிருப்பதும் தெரியவந்தது. 
 
இதுகுறித்து அவர் காவல்துறையில் முறைப்பாடளித்துள்ளார். 
 
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தடயங்களைச் சேகரித்து விசாரணை நடத்தினர். 
 
அப்போது, அவரது வீட்டின் அறையில் திருடன் எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் மீட்கப்பட்டது. 
 
அதில், "உன் வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை. இதற்கு இத்தனை கேமராவா? அடுத்த முறை என்னை மாதிரி யாராவது திருடன் வந்தால் ஏமாறாமல் இருக்க காசாவது வை. மன்னித்துக்கொள்ளவும். இப்படிக்கு திருடன்" என்று எழுதப்பட்டிருந்தது. 
 
அந்த கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர், அந்தப் பகுதியில் உள்ள மற்ற சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து, இந்த நூதன திருட்டில் ஈடுபட்ட நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். 
 
வீட்டில் பெரிய அளவில் பணம் இல்லாத விரக்தியில் திருடன் கடிதம் எழுதி வைத்துச்சென்ற இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes