General23 January 2026

மின்சாரத்துறையில் அதிரடி மாற்றம் - இறுதிக்கட்டத்தை எட்டிய மறுசீரமைப்பு

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், தேசிய அபிவிருத்தி இலக்குகளை எட்டவும் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது. 
 
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் நோயல் பிரியந்த, மின்சக்தி துறையுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருடனும் விரிவான ஆலோசனைகளை நடத்திய பின்னரே இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்தார். 
 
குறிப்பாக, மின்சார சபையின் ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். 
 
மறுசீரமைப்புத் திட்டத்தின் போது ஊழியர்களால் முன்வைக்கப்பட்ட நலன்புரி விவகாரங்கள் மற்றும் ஏனைய கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், சாத்தியமான அனைத்து விடயங்களுக்கும் உரிய தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக நிர்வாகத் தரப்பு தெரிவித்துள்ளது. 
 
மின்சாரத் துறையின் அபிவிருத்தியானது நாட்டின் தேசிய முன்னுரிமை மிக்க விடயமாகும். இந்தச் சூழலில், மறுசீரமைப்புச் செயற்பாடுகளை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு ஊழியர்கள், நுகர்வோர் மற்றும் குறிப்பாக தொழிற்சங்கங்கள் தொடர்ந்தும் தமது ஆதரவை வழங்கும் என மின்சார சபை நிர்வாகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes