General23 January 2026

மௌனம் கலைத்தார் ஹசீனா!

2024 இல் பங்களாதேஸை விட்டு வெளியேறிய பிறகு, இந்தியாவில் தனது முதல் பகிரங்க உரையை நிகழ்த்திய முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 
 
டெல்லியில் உள்ள வெளிநாட்டு நிருபர்கள் சங்கத்தில் ஒலிபரப்பப்பட்ட குரல் பதிவு செய்தி மூலம் உரையாற்றிய அவர், யூனுஸின் ஆட்சியை "சட்டவிரோதமானது மற்றும் வன்முறையானது" என்று சாடினார். 
 
ஷேக் ஹசீனா தனது உரையில் 5 முக்கிய கோரிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
 
சட்டவிரோத யூனுஸ் நிர்வாகத்தை அகற்றி, மீண்டும் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் எனவும் தெருக்களில் நடக்கும் வன்முறைகள் மற்றும் சட்டமின்மையை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
பெண்கள் மற்றும் மதச் சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்கு இரும்புக்கரம் போன்ற உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்ட அவர் ஊடகவியலாளர்கள் மற்றும் அவாமி லீக் உறுப்பினர்கள் மீதான அரசியல் பழிவாங்கல் வழக்குகள் நிறுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 
 
கடந்த கால நிகழ்வுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை ஒரு நடுநிலையான விசாரணையை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related recommendation
Hiru TV News | Programmes