International04 February 2026

ட்ரோன் தாக்குதலுக்கு மத்தியிலும் அமெரிக்கா - ஈரான் இரகசியப் பேச்சுவார்த்தை

அரபிக்கடலில் அமெரிக்கப் போர்க்கப்பலை அச்சுறுத்திய ஈரானிய ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட போதிலும், பதற்றத்தைத் தணிக்க இரு நாடுகளுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "ஈரானுடன் தற்போது நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர்கள் ஏதோ ஒரு தீர்வை எட்ட விரும்புகிறார்கள், அது நடக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்," எனத் தெரிவித்தார்.

கடந்த ஜூன் மாதம் ஈரான் மீது அமெரிக்கா நடத்திய 'மிட்நைட் ஹேமர்' (Midnight Hammer) வான்வழித் தாக்குதலை நினைவூட்டிய ட்ரம்ப், அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்பட்ட அந்தச் சம்பவம் மீண்டும் நிகழ ஈரான் விரும்புவதில்லை எனக் குறிப்பிட்டார்.

வளைகுடா பிராந்தியத்திற்கு 'யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்' கப்பலுடன் சுமார் 5,700 மேலதிக துருப்பினரை அமெரிக்கா அனுப்பியுள்ளது. இது ஈரானுக்கு அழுத்தத்தைக் கொடுக்கும் தந்திரோபாயமாகக் கருதப்படுகிறது.

ஈரானின் 'ஷாஹித்-139' ரக ஆளில்லா விமானம் , சர்வதேச கடற்பரப்பில் பயணித்த அமெரிக்க விமானம் தாங்கி கப்பலை நோக்கி ஆக்ரோஷமாக வந்ததாகவும் எச்சரிக்கைகளை மீறி வந்த அந்த அமெரிக்கப் போர் விமானம் சுய பாதுகாப்பிற்காகச் சுட்டு வீழ்த்தியதாகவும் அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.

இதற்குப் பதிலடியாக, ஹார்முஸ் நீரிணையில் சென்ற அமெரிக்க வர்த்தகக் கப்பலை ஈரானியப் புரட்சிகர காவல்படை (IRGC) அச்சுறுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தைக்கான இடம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை

துருக்கிக்கு பதிலாக ஓமானில் இந்தப் பேச்சுவார்த்தையை நடத்தவும், அதன்போது அணுசக்தி விவகாரங்களை மட்டும் விவாதிக்க விரும்புவதாகவும் ஈரான் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அணுசக்தி மட்டுமன்றி, ஈரானின் ஏவுகணைத் திட்டம் மற்றும் பிராந்திய ஆயுதக் குழுக்களுடனான தொடர்பு குறித்தும் விவாதிக்க விரும்பவதாக அமெரிக்கா தெரிவிக்கிறது.
Related recommendation
Hiru TV News | Programmes