Sports28 April 2026

தோனி ஏன் இன்னும் விளையாடவில்லை? பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் விளக்கம்

ஐபிஎல் 2026 தொடர் ஆரம்பமாகி ஒரு மாதம் கடந்துள்ள போதிலும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ். தோனி இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடாதது ரசிகர்களிடையே பெரும் கவலையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான தோல்வியின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த பிளெமிங், தோனி விளையாடாததற்கான முதன்மைக் காரணத்தை விளக்கினார்.

தோனிக்கு ஏற்பட்ட கெண்டைக்கால் தசை காயம் மீண்டும் தீவிரமடைந்தமையே அவர் விளையாடாததற்குப் பிரதான காரணம் எனத் தெரிவித்தார்.

பயிற்சிப் போட்டிகளின் போது அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டதாகவும், அதிலிருந்து மீண்டு வர அவர் முயற்சித்த போதிலும், மீண்டும் அதே இடத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் அவர் குணமடைவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகப் பிளெமிங் குறிப்பிட்டார்.

காயம் ஒருபுறம் இருந்தாலும், தோனி மைதானத்தில் தொடர்ந்து தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். அவர் வலைப்பயிற்சியில் துடுப்பெடுத்தாடுவதுடன் , அண்மையில் விக்கெட் காப்பாளர் பயிற்சியிலும் ஈடுபட்டதைக் காண முடிந்தது.

எனினும், அணியின் பிசியோதெரபிஸ்டின் கண்காணிப்பில் அவர் வேகமாக ஓடிப் பயிற்சியில் ஈடுபடுகின்றார்.

அவர் மீண்டும் எப்போது களம் இறங்குவார் என்பது அவரது உடல்நிலை முன்னேற்றத்தைப் பொறுத்தே அமையும் என்றும், அது குறித்த இறுதி முடிவை தோனியே எடுப்பார் என்றும் பிளெமிங் மேலும் தெரிவித்தார்.

தற்போது புள்ளிப்பட்டியலில் 6 ஆவது இடத்தில் இருக்கும் சென்னை அணி, எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடவுள்ளது.

அந்தப் போட்டியில் 'தல' தோனி மீண்டும் களமிறங்குவாரா என்பதே தற்போது சென்னை அணி ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் பார்க்க..


Related recommendation
Hiru TV News | Programmes