General30 April 2026

இலங்கையில் 2010 இற்குப் பின் பிறந்தவர்களுக்கு புகையிலை தடை?

இலங்கையில் 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த அனைத்து குழந்தைகளையும் புகையிலை பாவனை இல்லாத ஒரு புதிய தலைமுறையாக மாற்றுவதற்கான விசேட பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் நேற்று (28) கையளிக்கப்பட்டது.

ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு பிறந்த எவரும் புகையிலை மற்றும் புகையிலைப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதைத் தடைசெய்து கட்டுப்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

தேசிய புகையிலை மற்றும் மதுபான அதிகாரசபையின் சட்டங்களை தற்போதைய காலத்திற்கு ஏற்ப புதுப்பிப்பதற்கான பரிந்துரைகளும் இதனுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கிச் செல்வதற்கு புகையிலையும் மதுபானமும் பெரும் தடையாக இருப்பதாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இதன்போது சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் புகையிலை மற்றும் மதுவினால் ஆண்டுதோறும் சுமார் 22,000 பேர் உயிரிழக்கின்றனர். நாட்டில் நிகழும் மரணங்களில் 80 சதவீதம் தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன, இதற்குப் புகையிலை மற்றும் மதுவே முக்கிய காரணம் என தேசிய புகையிலை மற்றும் மதுபான அதிகாரசபையின் தலைவர் மருத்துவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார்.

உலகில் ஆண்டுதோறும் சுமார் 8 கோடி மக்கள் புகையிலையினால் உயிரிழக்கின்றனர். இதில் 7 கோடி பேர் நேரடியாகவும், 10 சதவீதமானோர் மறைமுகப் புகைப்பிடித்தலாலும் பாதிக்கப்படுகின்றனர்.

புகையிலை மற்றும் மது ஆகியவை மற்றைய போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதற்கான முதல் நுழைவாயிலாக அமைவதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை பாடசாலை மாணவர்களிடையே சிகரெட் பயன்பாடு அதிகரித்து வருவதாக ராஜரட்ட பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின் எல்.எல்.அமில இசுரு கவலை வெளியிட்டார்.

மேலும், சுகாதார சேவைக்காக ஒதுக்கப்படும் நிதியில் பெரும் பகுதி புகைப்பிடிப்பதால் ஏற்படும் நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கே செலவிடப்படுவதாகவும், இதனைத் தடுக்கப் புகையிலை கிடைப்பதைக் கட்டுப்படுத்துவதே அறிவியல் ரீதியான தீர்வாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்

உலகில் புகைப்பிடிப்பவர்களில் சுமார் ஒரு சதவீத நபர்கள் மட்டுமே மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.
Related recommendation
Hiru TV News | Programmes