General30 April 2026

மஸ்கெலியா பிரதேச மருத்துவமனையில் உத்தியோகஸ்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு: வெளிநோயாளர் பிரிவு ஸ்தம்பிதம்!

மஸ்கெலியா பிரதேச மருத்துவமனையில் பணிபுரியும் பெண் உத்தியோகஸ்தர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயற்சிக்கு நீதி கோரி, இன்று (30) காலை 8 மணி முதல் மருத்துவமனை உத்தியோகஸ்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 28 ஆம் திகதி, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவரைப் பார்ப்பதற்காக வந்தவர்கள், பார்வையாளர் நேரம் முடிந்த பின்னரும் தங்கியிருந்து சிகிச்சை அறையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அவதானித்த அங்கு கடமையிலிருந்த பெண் உத்தியோகஸ்தர் ஒருவர், பார்வையாளர் நேரம் முடிவடைந்துவிட்டதாகவும், மருத்துவமனைக்குள் தகாத முறையில் நடந்து கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

இதன்போது, ஆத்திரமடைந்த நபர்கள் குறித்த பெண்உத்தியோகஸ்தரை மிகவும் அநாகரீகமான வார்த்தைகளால் திட்டியதுடன், அவர் மீது தாக்குதல் நடத்தவும் முற்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட போதிலும், இன்றைய தினம் வரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

காவல்துறையினரின் இந்த மெத்தனப் போக்கைக் கண்டித்தும், தமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியுமே இந்தத் திடீர் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மஸ்கெலியா மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவு (OPD) முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.

இதனால் அதிகாலை முதல் சிகிச்சைக்காக வருகை தந்த நூற்றுக்கணக்கான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள் எவ்வித சிகிச்சையுமின்றி ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.

இருப்பினும், வெளிநோயாளர் பிரிவைத் தவிர்ந்த ஏனைய அத்தியாவசிய சேவைகள் மற்றும் தங்கிச் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கான சேவைகள் வழமை போல் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மருத்துமனைஉத்தியோகஸ்தர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக இவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடரும் எனவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes