General07 May 2026

விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு மீளப்பெறப்பட்டது!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்பட்டு வந்த முதலமைச்சருக்குரிய விசேட பாதுகாப்பு மற்றும் வாகன அணிவகுப்பு இன்றி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பட்டினப்பாக்கம் அலுவலகத்திலிருந்து நேற்று தனது நீலாங்கரை இல்லத்துக்குத் திரும்பியுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையைத் திரட்ட முடியாமல் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தவித்து வருகிறது.

தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, பெரும்பான்மையான ஆசனங்களை கொண்டுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு தொடருந்து இரண்டு நாட்களாக விசேட காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில், நேற்று தமிழக ஆளுநரை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரிய போதிலும், ஆட்சியமைப்பதற்கு ஆளுநர் அழைப்பு விடுக்காத நிலையில் அவருக்கான பாதுகாப்பு மீளப் பெறப்பட்டுள்ளது.

அதன்படி, அவரின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த 4 வாகனங்களுடன், 50 காவல்துறை அதிகாரிகளும் மீளப் பெறப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

108 இடங்களில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், அறுதிப் பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை எட்டுவதில் அக்கட்சிக்குப் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது.

ஆட்சியமைப்பதில் நிலவும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், அவருக்கு வழங்கப்பட்டிருந்த உயர்மட்ட பாதுகாப்பு வாகனங்கள் எதுவும் இன்றி அவர் இல்லம் வந்தடைந்தமை அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இதனிடையே, தனது கட்சிக்குத் தேவையான மேலதிக இடங்களைப் பெற காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவை விஜய் கோரியுள்ளார்.

இருப்பினும், இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் இது குறித்து மாநிலத் தலைமையே முடிவு செய்யும் எனத் தெரிவித்துள்ள நிலையில், ஆட்சியமைப்பதற்கான அடுத்தகட்ட நகர்வுகளில் தவெக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes